பெரம்பலூர் மாவட்டம் சில்லக்குடி கிராம பொதுமக்கள், கிராம நிர்வாக அலுவலகத்தில் ரேஷன் அட்டைகளை ஒப்படைக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெரம்பலூர் மாவட்டத்தில் உள்ள சில்லக்குடி கிராமத்தில் பொதுமக்கள் மாவட்ட நிர்வாகத்திடம் கடந்த 28-ஆம் தேதி ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி பெற்று அதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர். இந்த நிலையில் தேர்தல் நெருங்கிக் கொண்டிருப்பதால் இந்த மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு தடை விதிக்கப்பட்டிருந்தது. இதனையடுத்து சென்னை உயர்நீதிமன்றத்தில் சில்லக்குடி ஜல்லிக்கட்டு அமைப்பினர் இதுகுறித்து மனுத்தாக்கல் செய்திருந்தனர். மேலும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு உரிய அனுமதியும் பெற்றனர். அதனைத் தொடர்ந்து மாவட்ட நிர்வாகத்திடம் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி கேட்டனர். ஆனால் சில்லக்குடியில் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு மாவட்ட நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
மேலும் தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நிலையிலும் தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு நடத்தப்பட்டுள்ளதாகவும், அதேபோல் எங்கள் கிராமத்திலும் ஜல்லிக்கட்டு நடத்துவதற்கு அனுமதி வழங்க வேண்டும் என்றும் அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இருப்பினும் மாவட்ட நிர்வாகம் அனுமதி வழங்க மறுத்ததால் மனவேதனை அடைந்த அப்பகுதி மக்கள் திடீரென ஊரின் தெருக்கள் மற்றும் அனைத்து வீடுகளிலும் நேற்று முன்தினம் கருப்புக் கொடியை ஏற்றி எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.
ஆனால் அதன் பின்பும் மாவட்ட நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்காததால் அப்பகுதியில் உள்ள பொதுமக்கள் தங்களுடைய குடும்ப அட்டைகளை அதிகாரிகளிடம் ஒப்படைத்து போராட்டத்தில் ஈடுபட முடிவெடுத்தனர். இதற்காக கிராம நிர்வாக அலுவலர் அலுவலகத்திற்கு ரேஷன் அட்டைகளுடன் பொதுமக்கள் திரண்டு வந்தனர். இதையடுத்து அலுவலக வாசல் படியில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் சில்லக்குடியில் ஜல்லிக்கட்டு நடத்த அனுமதிக்காவிட்டால் சட்டமன்ற தேர்தலை புறக்கணிக்க போவதாகவும் அப்பகுதி மக்கள் தெரிவித்துள்ளனர்.