Categories
அரசியல் மாநில செய்திகள்

அனுமதியின்றி மசூதி கட்டியதாக சர்ச்சை…. ஹெச்.ராஜா பரபரப்பு குற்றச்சாட்டு…..!!!!

புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள மேற்பனைக்காட்டைச் சேர்ந்த முகமது அலி வீடு கட்டுவதற்கு அனுமதி பெற்ற இடத்தில் மசூதி தோற்றமுடைய கட்டிடத்தை கட்டியுள்ளதாகவும், அதனை அகற்ற வேண்டும் எனக்கூறி மனு அளிக்கப்பட்ட நிலையில் அந்த கட்டிடத்தை அகற்றுமாறும் கடந்த வருடம் டிசம்பர் மாதம் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்தது. அவ்வாறு நீதிமன்ற தீர்ப்பு அறிவித்து 4 மாதங்கள் ஆன நிலையில் இதுவரை அந்த கட்டிடத்தை அகற்றவில்லை. இதனால் உடனே அந்த கட்டிடத்தை அகற்றக்கோரி பாஜகவின் மூத்த தலைவர் ஹெச்.ராஜா தலைமையில் பாஜகவினர் மேற்பனைக்காடு மழைமாரியம்மன் கோவிலில் இருந்து ஒன்றரை கிலோ மீட்டர் தூரம் பேரணியாக சென்று மசூதியை முற்றுகையிடமுயற்சி செய்தனர்.

அப்போது அவர்களை தடுத்து நிறுத்திய காவல்துறையினர் சமரச பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். எனினும் காவல்துறையினரின் பேச்சுவார்த்தைக்கு உடன்பட மறுத்த அவர்கள் 2 மணி நேரத்திற்கு மேலாக சாலையிலேயே நின்றவாறு ஆலங்குடி காவல்துணை கண்காணிப்பாளர் வடிவேல் உள்ளிட்ட அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதுமட்டுமல்லாமல் வருவாய்துறையினர் வரும் வரை சாலையை விட்டு நகரமாட்டேன் என்று ஹெச்.ராஜா கூறினார். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த ஊராட்சி மன்றத்தலைவர் வருகிற 12ஆம் தேதிக்குள் அந்த கட்டிடத்தை முகமது அலி அகற்றாவிட்டால், 13 ம் தேதி அரசே அந்த கட்டிடத்தை அகற்றும் என்று எழுத்துப்பூர்வமாக அளித்த உறுதியையடுத்து ஹெச்.ராஜா அங்கிருந்து புறப்பட்டு சென்றார்.

இதற்கிடையே ஹெச்.ராஜா செய்தியாளர்களிடம்பேசியபோது, மசூதிகட்டிடத்தை அகற்ற ஊராட்சிமன்ற தலைவர் உறுதியளித்துள்ளார். அவ்வாறு அகற்றப்படாவிட்டால் இந்துக்களை திரட்டி போராட்டம் நடத்தப்படும். ஆலங்குடி தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் சுற்றுச்சூழல் துறை அமைச்சருமான மெய்யநாதன் முஸ்லீம்களுக்கு ஆதரவாக செயல்படுவதாகவும், இதே நிலை நீடித்தால் அமைச்சர் மெய்யநாதனுக்கு வாக்கு செலுத்தக் கூடாது என்று தீர்மானிக்கப்படும் என்று கூறினார். அத்துடன் அந்த மாவட்டத்தில் உள்ள பாஜக அலுவலகம் அனுமதியின்றி கட்டப்பட்டுள்ளதாக நகராட்சி சார்பில் கொடுக்கப்பட்டுள்ள நோட்டீஸ் தொடர்பாக எழுப்பப்பட்ட கேள்விக்கு அனுமதி பெறப்பட்டு விட்டதாக தெரிவித்தார்.

Categories

Tech |