கன்னியாகுமரி மாவட்டத்தில் உள்ள காமராஜ் பேருந்து நிலையத்திற்கு தினமும் ஏராளமான பேருந்துகள் வந்து செல்கின்றன. இங்கு பத்மநாபபுரம் நகராட்சிக்கு சொந்தமான கடைகள் வாடகைக்கு விடப்பட்டுள்ளது. இதனால் பொதுமக்களும், பயணிகளும் அதிகமாக கடைக்கு வந்து செல்கின்றனர். இந்நிலையில் சிலர் பேருந்து நிலையத்திற்குள் நீண்ட நேரமாக வாகனத்தை நிறுத்திவிட்டு செல்வதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு, விபத்து ஏற்படும் அபாயமும் இருக்கிறது.
இதனால் பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகளும், பயணிகளும் மிகவும் சிரமப்படுகின்றனர். கடந்த சில நாட்களாக போலீசார் பேருந்து நிலையத்திற்குள் அத்துமீறி நுழையும் தனியார் வாகனங்கள் மீது அபராதம் விதிக்கின்றனர். மேலும் பேருந்து நிலையத்திற்குள் அத்துமீறி போக்குவரத்திற்கு இடையூறாக வாகனங்களை நிறுத்தினால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வாகன ஓட்டிகளுக்கு போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.