அனுமதியின்றி நடந்த மாட்டுவண்டி பந்தயத்தை வேடிக்கை பார்க்க வந்த தொழிலாளி மீது மாடு முட்டி உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம் போடியை அடுத்துள்ள குரங்கணி இரட்டை வாய்க்கால் அருகே தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினின் பிறந்தநாளை முன்னிட்டு தி.மு.க சார்பில் இரட்டை மாட்டு வண்டி பந்தயம் நடைபெற்றுள்ளது. இந்த பந்தயத்தில் சுமார் 200க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்ற நிலையில், இதனை தேனி வடக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் தங்கதமிழ் செல்வன் கொடியசைத்து தொடங்கி வைத்துள்ளார்.
இதனையடுத்து பந்தயத்தில் காளைகள் ஒன்றுகொண்டு போட்டிபோட்டு ஓடி கொண்டிருந்த நிலையில் நிகழ்ச்சியை பார்ப்பதற்க்காக வந்திருந்த போடிபுதூரை சேர்ந்த ராமர் என்பவர் மீது ஒரு மாடு கொம்பால் முட்டி தூக்கி வீசியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த ராமரை அங்கிருந்தவர்கள் மீட்டு போடி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும், சிகிச்சை பலனின்றி ராமர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
மேலும் இதுகுறித்து போடி காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை நடத்தியதில் அரசின் அனுமதியின்றி சட்ட விரோதமாக பந்தயம் நடத்தியது தெரியவந்துள்ளது. எனவே இதனை நடத்திய கம்பம் தேரடி தெருவை சேர்ந்த ரஞ்சித்குமார், புதுபட்டியை சேர்ந்த மகேஸ்வரன், வாய்க்கால்பட்டியை சேர்ந்த பரத் மற்றும் திமுகவினர் மீது வழக்குபதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.