ஆட்சியர் அலுவலகத்தில் விவசாயி தீக்குளிக்க முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்றுள்ளது. இங்கு வீரவநல்லூரை சேர்ந்த விவசாயி சுப்பையா என்பவர் தனது மகன் ஐயப்பன் உடன் சென்றுள்ளார். இந்நிலையில் சுப்பையா திடீரென தான் கொண்டு வந்த மண்ணெண்ணையை உடல் முழுவதும் ஊற்றி தீக்குளிக்க முயற்சி செய்துள்ளார். இதனை பார்த்ததும் அதிர்ச்சியடைந்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுக்கொண்டிருந்த காவல்துறையினர் அவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர்.
இதுகுறித்து சுப்பையா கூறும்போது, வீரவநல்லூர் மாடன்குளம் அருகே எனது வயல் அமைந்துள்ளது. அதன் அருகில் பொதுப்பணித்துறை சார்பில் 2 அடி உயர மறுகால் சுவர் கட்டப்பட்டதால் எனது வயலில் தண்ணீர் தேங்கி விவசாயம் செய்ய முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எனவே சுவரை அகற்ற வேண்டும் என பலமுறை அதிகாரிகளிடம் தெரிவித்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் மன உளைச்சலில் தற்கொலைக்கு முயன்றதாக விவசாயி தெரிவித்துள்ளார்.