கட்டுப்பாட்டை இழந்த லாரி பள்ளத்தில் பாய்ந்த விபத்தில் 2 பேர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டனர்.
கர்நாடக மாநிலத்தில் இருந்து கிரானைட் பாரம் ஏற்றிக்கொண்டு லாரி ஒன்று சென்று கொண்டிருந்தது. இந்த லாரியை சனமுல்லா என்பவர் ஓட்டி சென்றுள்ளார். அவருடன் கிளீனரான இர்பான் என்பவர் இருந்துள்ளார். இந்நிலையில் ஈரோடு மாவட்டத்தில் உள்ள திம்பம் மலைப்பாதையில் இருக்கும் 19-வது கொண்டை ஊசி வளைவில் லாரி சென்று கொண்டிருந்தது. அப்போது எதிர்பாராதவிதமாக லாரி ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்துவிட்டது. அதன் பின் கண்ணிமைக்கும் நேரத்தில் சாலையோரம் இருந்த தடுப்பு சுவரை உடைத்துக் கொண்டு லாரி பள்ளத்தில் பாய்ந்தது.
அப்போது பள்ளத்தில் இருந்த ஒரு மரத்தில் லாரியின் முன்பக்கம் மோதியதால் உருண்டு விழாமல் அந்தரத்தில் தொங்கியது. இந்த விபத்தில் சனமுல்லாவும், இர்பானும் அதிர்ஷ்டவசமாக சிறு காயத்துடன் உயிர் தப்பிவிட்டனர். இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த வாகன ஓட்டிகள் டிரைவரையும், கிளீனரையும் மீட்டு அரசு மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிரேன் மூலம் விபத்துக்குள்ளான லாரியை அப்புறப்படுத்தி போக்குவரத்தை சரி செய்துள்ளனர்.