தேனியில் சாக்கடை குடிநீருடன் கலந்து வருவதால் மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.
தேனி மாவட்டம் போடியில் இந்திரா காலணி அமைந்துள்ளது. இப்பகுதியில் 200 க்கும் மேலான குடும்பத்தினர்கள் வசித்து வருகிறார்கள். இந்த நிலையில் அங்கு கடந்த 2 மாதங்களுக்கு முன்பாக பாதாள சாக்கடைக்கு குழாய் பதிக்கும் பணி நடைபெற்றது. அதற்காக அங்கிருக்கும் சாலைகளில் பள்ளம் தோண்டப்பட்டுள்ளது.
அப்போது அருகிலிருந்த குடிநீருக்கான குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து சாக்கடை குடிநீருடன் கலந்ததால் தண்ணீர் கலங்கலாக வந்தது. இச்சம்பவம் குறித்து அப்பகுதியிலிருக்கும் பொதுமக்கள் நகராட்சியில் புகார் கொடுத்தனர். ஆனால் எந்த விதமான நடவடிக்கையும் இதுவரை எடுக்கப்படவில்லை. இதனால் பொறுமையிழந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டுள்ளனர்.