அசாமில் வெள்ளத்தில் ரயில் பெட்டிகள் மிதக்கும் காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
அசாம் மாநிலத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் கனமழையின் காரணமாக அந்த மாநிலத்தின் பெரும்பாலான பகுதிகள் வெள்ளக்காடாக காட்சி அளிக்கின்றது. மேலும் நிலச்சரிவுகள் மற்றும் மழை, வெள்ளம் காரணமாக ரயில்வே தண்டவாளங்கள், பாலங்கள் மற்றும் சாலை போக்குவரத்து பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்த வகையில் இந்த மழை வெள்ளத்தால் சில்சார்-கௌஹாத்தி விரைவு ரயில் அந்த மாநிலத்தின் காச்சர் என்ற பகுதியில் சிக்கிக் கொண்டு உள்ளது.
இந்த நிலையில் அதில் பயணம் செய்த பயணிகளை இந்திய விமானப்படை தனது விமான குழு மூலமாக மீட்டு இருக்கின்றது. மேலும் வெள்ளம் பாதித்த மக்களை மீட்கும் பணியில் ராணுவம், துணை இராணுவப் படைகள், அசாம் பேரிடர் மீட்பு படை, தீயணைப்பு மற்றும் அவசரகால துறையை சேர்ந்தவர்கள் ஈடுபட்டு வருகின்றார்கள். இதற்கிடையில் கனமழையால் ஹப்லாங்க் ரயில் நிலையத்தில் ரயில் பெட்டிகள் வெள்ளத்தில் மிதக்கும் காட்சிகள் இணையதளத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கின்றது.