காஷ்மீரில் வன்முறை செயல்களில் பெண்கள் ஈடுபடுத்தபடுவதாக, பயங்கரவாதிகள் சதியானது வெளியாகியுள்ளது.
ஜம்மு – காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து கடந்த 2019ஆம் ஆண்டு விலக்கிக் கொள்ளப்பட்டது. இதைத் தொடர்ந்து, ஜம்மு – காஷ்மீர், லடாக் என, 2 யூனியன் பிரதேசங்களாக பிரிக்கப்பட்டன. தற்போது இங்கு ஜனாதிபதி ஆட்சி அமலில் உள்ளது. இந்நிலையில், பயங்கரவாத நடவடிக்கைகளுக்கு எதிராக, ஜம்மு – காஷ்மீர் நிர்வாகம் மற்றும் பாதுகாப்புப் படைகளும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.
இதன் காரணமாக கடந்த 2 ஆண்டாக பயங்கரவாத சம்பவங்கள் வெகுவாக குறைந்துள்ளன. மேலும் சட்ட சபையுடன் கூடிய யூனியன் பிரதேசமாக ஜம்மு – காஷ்மீர் இருக்கும் என, ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இங்கு தொகுதி மறுவரையறை செய்யும் பணிகள் நடந்து முடிந்தவுடன், விரைவில் சட்டசபை தேர்தல் நடத்தப்படும் வாய்ப்புகள் இருப்பதாக கூறப்படுகிறது.
மேலும் சமீபத்தில், சோபுர் நகரில் பாதுகாப்புப் படையினர் மீது, பெட்ரோல் வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்தில், சி.ஆர்.பி.எப்., எனப்படும் மத்திய ரிசர்வ் போலீஸ் படை வீரர் மற்றும் உள்ளூர் போலீஸ்காரர் ஒரு வரும் காயமடைந்தனர். இத்தாக்குதல் குறித்து, அங்கிருந்த, ‘சிசிடிவி’ கேமராக்களில் பதிவான காட்சிகளின் அடிப்படையில் விசாரணை நடத்திய போலீசாருக்கு பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.
அந்த ‘சிசிடிவி’ காட்சியில் ‘பர்தா’ அணிந்த ஒரு பெண், இந்த வெடிகுண்டை வீசியது தெரியவந்துள்ளது. இதையடுத்து, போலீசார் நடத்திய விசாரணையில், அந்தப் பெண், பாரமுல்லாவைச் சேர்ந்த 38 வயதான ஹசினா அக்தர் என்பது தெரியவந்துள்ளது. மேலும் தொடர் விசாரணையில் அந்தப் பெண், தற்போது சிறையில் உள்ள பாகிஸ்தான் ஆதரவு பிரிவினைவாதி ஆயிஷா அந்தராபியுடன் தொடர்பில் இருப்பது தெரிய வந்துள்ளது.
இந்நிலையில் பாகிஸ்தான் பயங்கரவாதிகள், தங்களின் பயங்கரவாத செயல்களுக்கு, உள்ளூர் இளைஞர்களை பயன்படுத்தி வந்தநிலையில், தற்போது பெண்களையும் அதில் ஈடுபடுத்தியுள்ளது, பாதுகாப்புப் படையினருக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து போலீசார் கூறியுள்ளதாவது, பாகிஸ்தான் பயங்கரவாதிகள், ஆயுதம் உள்ளிட்ட பொருட்களை கொண்டு செல்வது, கற்களை வீசி தாக்குதல் நடத்துவது போன்றவற்றில், உள்ளூர் இளைஞர்களை பயன்படுத்தி வந்ததால், இந்த செயல்களில் பெண்களையும் ஈடுபடுத்த திட்டமிட்டுள்ளது.
இதற்கு முன்பும், பயங்கரவாதிகள் சில பெண்களை, இது போல தங்களுடைய முன்கள ஊழியர்களாக பயன்படுத்தியுள்ளனர். அந்தப் பெண்கள் தொடர் கண்காணிப்பில் உள்ளனர். தற்போது, வெடிகுண்டுகளை வீசி தாக்குதல் நடத்தும் அளவுக்கு, அவர்கள் பெண்களுக்கு பயிற்சி அளித்துள்ளனர். மேலும் தப்பியோடிய அந்தப் பெண்ணை கைது செய்யும் முயற்சிகள் நடந்து வருகின்றன என்று அவர்கள் கூறியுள்ளனர்.