சென்னை மாவட்டத்தில் உள்ள பல்லாவரம் அருகே பொழிச்சநல்லூர் பகுதியில் வெங்கடேஸ்வரா தெரு அமைந்துள்ளது. இந்த பகுதியில் தனியார் கட்டுமான நிறுவனம் ஒன்று புதிதாக அடுக்குமாடி குடியிருப்பை கட்டி வருகிறது. இதன் பணிகள் முடிவடைந்த நிலையில், புதுமண புகுவிழா நடைபெற்றுள்ளது. அதன் பிறகு வீட்டின உரிமையாளர் ராஜேந்திரன் (70) என்பவரிடம் பணம் கொடுத்து வீட்டிற்கு கண் திருஷ்டி கழிக்குமாறு கூறியுள்ளார். இந்நிலையில் ராஜேந்திரன் உயிருள்ள ஒரு சேவல், ஒரு பூசணிக்காய், ஊதுபத்தி மற்றும் சூடம் போன்ற பொருட்களை வாங்கிக் கொண்டு கட்டிடத்திற்கு சென்றுள்ளார். அப்போது திடீரென கையில் இருந்த சேவல் பறந்து சென்றுள்ளது.
அதைப் பிடிப்பதற்கு ராஜேந்திரன் முயற்சி செய்துள்ளார். அப்போது எதிர்பாராத விதமாக லிப்ட் காக தோண்டப்பட்ட பள்ளத்தில் அவர் தவறி விழுந்தார். இந்த விபத்தில் ராஜேந்திரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் சம்பவ இடத்திலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து சங்கர் நகர் காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் ராஜேந்திரனின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். மேலும் சேவலை பலி கொடுக்க சென்ற இடத்தில் சேவல் தப்பி முதியவர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.