தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் பச்சிளம் பெண் குழந்தை கடத்தப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சை பர்மா காலனியை சேர்ந்த டைல்ஸ் வேலை பார்க்க கூடிய குணசேகரன் என்பவர் அதே பகுதியை சேர்ந்த ராஜலட்சுமி என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்துள்ளார்.. இதனால் உறவினர்கள் யாரும் அவரிடம் தொடர்பில் இல்லாத நிலையில், இருவரும் தனியாக வீட்டில் வாழ்ந்து வந்துள்ளனர்..
இந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக பிரசவத்திற்காக தஞ்சை அரசு ராசா மிராசுதார் மருத்துவமனையில் ராஜலட்சுமி அனுமதிக்கப்பட்டார்.. இவருக்கு பெண் குழந்தை ஒன்று பிறந்துள்ளது. பிறந்து 3 நாட்கள் ஆன நிலையில் இன்று காலை 7 மணி அளவில் ஒரு பெண்ணால் குழந்தை கடத்தப்பட்டுள்ளது.. பெண்கள் வார்டு என்பதால் ஆண்களுக்கு அனுமதி கிடையாது என்பதால் கணவர் வெளியே சென்றுவிட்டார்..
மனைவி மட்டும் நேற்று இரவு முழுவதும் குழந்தையை வைத்துள்ளார்.. இந்த சூழலில் தான் இன்று காலை 45 வயது மதிக்கத்தக்க பெண் ஒருவர் நான் குழந்தையை பார்த்துக் கொள்கிறேன் நீ குளித்து விட்டு வா என்று கூறியுள்ளார்.. இவரது பேச்சை நம்பி ராஜலட்சுமியும் சென்றுள்ளார்.. இதையடுத்து வந்து பார்த்த போது குழந்தையும் அந்த பெண்ணையும் காணாமல் போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்..
இதையடுத்து உடனடியாக ராஜலட்சுமி அழுதபடியே கணவன் குணசேகரனிடம் தெரிவித்தார்.. இதுகுறித்து மருத்துவனையிடமும் கூறப்பட்டது.. பின் காவல்நிலையத்துக்கு தெரிவிக்கப்பட்டு தஞ்சை மேற்கு போலீசார் மருத்துவமனைக்கு வந்து வழக்கு பதிவு விசாரணை நடத்தினர்.. மேலும் சிசிடிவி காட்சியை பார்த்த போது, உதவுவது போல் நடித்து அந்த பெண் கட்டை பையில் வைத்து கடத்தி சென்றது தெரியவந்தது.. சிசிடிவி காட்சியை வைத்து குழந்தையை கடத்தியது யார்? எங்கே சென்றார்? என்பது குறித்து ஆய்வுகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இந்த சம்பவத்திற்கு முன்னதாக கடந்த 2 நாட்களாக அந்தப் பெண்மணி ராஜலட்சுமியிடம் பேச்சுக் கொடுத்து இருந்துள்ளார்.. நீங்கள் எப்படி வந்தீர்கள்.. துணைக்கு யாரும் இல்லையா என்று பல்வேறு கேள்விகளை கேட்டு சூழலை அறிந்து இந்த குழந்தையை கடத்தியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.