கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட சசிகலா பெங்களூரு விக்டோரியா மருத்துவமனையில் இருந்து சற்றுமுன் டிசார்ஜ் செய்யப்பட்டார். அவர் வெளியே வந்த காரின் முகப்பில் அதிமுக கொடி கட்டப்பட்டிருந்தது. இது தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இது தொடர்பாக கருத்து தெரிவித்த மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் கூறுகையில்,கொடியை பொருத்துவதற்கு எந்தவிதமான உரிமையும் அவர்களுக்கு கிடையாது. ஏற்கனவே கட்சியின் சட்ட விதிகளில் தெளிவாக குறிப்பிட்டு விட்டோம்.
ஒருவர் வெளியே சென்று புதிய கட்சியை ஆரம்பித்து விட்டாலும், தனியாக செயல்பட்டாலும் அவர்களின் பதவி பறிபோய்விடும். அந்த வகையில் அவர்களுக்கு கட்சியில் எந்த பொறுப்பும் கிடையாது. எந்த பொறுப்புமே இல்லாத ஒரு சூழலில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கொடியை பயன்படுத்துவது என்பது நிச்சயமாக சட்டத்திற்கு உட்படாத ஒரு விஷயம். சட்டத்திற்கு ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம். நிச்சயமாக இதை அனுமதிக்க முடியாது.
எங்களுடைய நிலையை நாங்கள் தெளிவாக எடுத்து விட்டோம். கடந்த 2017ஆம் ஆண்டு ஒட்டுமொத்தமாக கிளைக் கழகம் முதல் தலைமை கழகம் வரை எல்லோரும் ஒன்றுகூடி அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகம் பொன்மனச்செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் ஆரம்பித்த இந்த மாபெரும் இயக்கம், அம்மா கட்டிக்காத்த மாபெரும் இயக்கமாக இருக்கின்ற அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் சசிகலாவையும்,
அவரைச் சார்ந்தவர்களோ எந்தவித தலையீடும் இல்லாமல் அவர்களை முழுமையாக வெளியேற்றி விட்டு தான் இன்றைக்கு சிறப்பான முறையிலே கட்சியையும், ஆட்சியையும் வழிநடுத்துகின்றோம். அவர்களை பொருத்தவரை அதிமுக கொடியோ, தலைவர் படத்தையோ, அம்மா படத்தையோ உபயோகப்படுத்தக் கூடாது, எந்த விதமான தார்மீக உரிமையும் கிடையாது என அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்தார்.