புதுவையில் ஆளும் அரசு கவிழந்ததால் காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா செய்ய திட்டமிட்டுள்ளதாக தெரிகின்றது.
புதுச்சேரி சட்டப்பேரவையில் இன்று காலை நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் ஆளும் காங்கிரஸ் அரசு பெரும்பான்மையை இழந்தது. இதையடுத்து முதல் அமைச்சர் நாராயணசாமி ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனிடம் தனது ராஜினாமா கடிதத்தை கொடுத்துவிட்டு, நியமன உறுப்பினர்களுக்கு வாக்களிக்க உரிமையில்லை என்று நாங்கள் சொன்னோம்.
அதை சபாநாயகர் ஏற்றுக் கொள்ளாத காரணத்தால் அவையிலிருந்து வெளிநடப்பு செய்து விட்டு ஆளுநரை சந்தித்து அமைச்சரவை ராஜினாமா செய்யும் முடிவை அறிவிக்கிறோம்.இனிமேல் துணைநிலை ஆளுநர் எடுக்கும் முடிவை பொருத்தது என தெரிவித்தார். மேலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களின் உரிமையைப் பறித்து, நியமன உறுப்பினர்கள் மூன்று பேரை நியமித்து, அவர்கள் மூலம் ஆட்சிக் கவிழ்ப்பு செய்த பாரதிய ஜனதா கட்சியையும்,
அவர்களுக்கு உறுதுணையாக இருக்கின்ற என்ஆர் காங்கிரஸ் கட்சியையும், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும் புதுச்சேரி மாநில மக்கள் வருகின்ற தேர்தலில் தகுந்த தண்டனையை கொடுப்பார்கள் என்று தெரிவித்தார். இதனிடையே புதுச்சேரியில் ஆட்சி கவிழ்ந்ததால் எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் ஆட்சியமைக்க உரிமை கோருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அப்படி எதிர்க்கட்சி எம்எல்ஏக்கள் புதுச்சேரியில் ஆட்சி அமைக்க உரிமை கோரினால் எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வோம் என காங்கிரஸ் கட்சி கொறாடா அனந்தராமன் அறிவித்துள்ளார்.