3 வேளாண் சட்டங்களை திரும்ப பெற்றதற்கு சசிகலா பிரதமர் மோடிக்கு நன்றி தெரிவித்துள்ளார்.
நேற்று காலை நாட்டு மக்கள் முன்பு தோன்றிய பிரதமர் மோடி திடீர் என்று மூன்று வேளாண் சட்டங்களையும் ரத்து செய்வதாக தெரிவித்தார். மேலும் விவசாயிகள் தங்களது போராட்டத்தை கைவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் வரவேற்பு தெரிவித்திருந்த நிலையில் சசிகலா அவர்கள் அதிமுக பொதுச்செயலாளர் என்ற பெயரில் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நாட்டு மக்களின் நலனை கருத்தில் கொண்டு விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று எந்தவித அரசியல் கவுரவமும் பார்க்காமல் பெருந்தன்மையோடு மூன்று சட்டங்களையும் வாபஸ் பெற்றதற்கு நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
‘கடவுள் என்னும் முதலாளி, கண்டெடுத்த தொழிலாளி விவசாயி’ என்ற புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் பாடலை குறிப்பிட்டு விவசாயிகள் நலன் சார்ந்த செயல்பாடுகளை நினைவுகூர்ந்தார். கடந்த ஓராண்டுக்கும் மேலாக நடைபெற்ற போராட்டத்தில் தங்கள் இன்னுயிரை நீத்த அனைத்து விவசாயிகளின் குடும்பங்களுக்கு இழப்பீடு வழங்க வேண்டும். அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் திரும்பப் பெற வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். தீபத் திருநாளில் விவசாயிகளின் வாழ்க்கையில் ஒளியேற்றிய பிரதமருக்கு என் நெஞ்சார்ந்த நன்றி என்று கூறினார்.
இதனைத்தொடர்ந்து தமிழக மக்களின் வாழ்க்கையில் ஒளியேற்ற நீங்கள் அரசியலுக்கு வரவேண்டுமென்றும், அதிமுகவை கட்டுக்கோப்பான முறையில் கொண்டு செல்ல தலைமை ஏற்க வேண்டும் என்றும் சசிகலா ஆதரவாளர்கள் தெரிவித்துள்ளனர். அதேசமயத்தில் அரசியல் களத்தில் தன்னை நிலைநாட்ட மேற்கொள்ளும் நடவடிக்கைகள் தான் இது என்றும், அரசியல் எதிர்காலத்தை கருதி பாஜக ஆதரவு நிலைப்பாட்டில் நெருங்கி செல்வதாகவும் பலரும் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். மேலும் சசிகலாவின் கூற்றை அரசியலாக்க வேண்டாம் என்றும் அவரது ஆதரவாளர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.