தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் டம்ளர்கள் விற்பனை செய்யப்படுவதாக அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி மாநகராட்சி கமிஷனர் சிவசுப்பிரமணியன் அனைத்து கடைகளிலும் சோதனை செய்ய அதிரடியாக உத்தரவிட்டார். அந்த உத்தரவின் படி சுகாதார ஆய்வாளர் சுரேஷ்குமார், மாநகராட்சி அதிகாரிகள், ஊழியர்கள், உள்ளிட்ட பலர் திண்டுக்கல்- பழனி சாலை, தாலுகா அலுவலகம் சாலை, மவுன்ஸ்புரம் , கோட்டைகுளம் சாலை ஆகிய பகுதிகளில் அமைந்துள்ள 10-க்கும் மேற்பட்ட கடைகளில் சோதனை செய்தனர்.
அந்த சோதனையில் கடைகளில் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகள் மற்றும் டம்ளர்கள் விற்பனை செய்யப்படுவது தெரியவந்தது. இதனையடுத்து அதிகாரிகள் 700 கிலோ பிளாஸ்டிக் பொருட்களை பறிமுதல் செய்து சேதப்படுத்தியுள்ளனர். மேலும் இதுபோன்ற பிளாஸ்டிக் பொருட்களை விற்பனை செய்யும் கடையின் உரிமையாளர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ளனர்