ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன் நகரில் முத்துராமலிங்க தேவருக்கு இன்று 115-வது ஜெயந்தி விழா கொண்டாடப்படுகிறது. இந்த விழாவில் அதிமுக, திமுக உட்பட பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்வதற்காக செல்கின்றனர். திமுக கட்சியின் சார்பில் உதயநிதி ஸ்டாலின் மற்றும் அமைச்சர்கள் துரைமுருகன், ஐ.பெரியசாமி, கே.என் நேரு ஆகியோர் கலந்து கொள்வதற்காக செல்கின்றனர்.
இதேப்போன்று அதிமுக கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள் சி. விஜயபாஸ்கர், காமராஜ் மற்றும் பாஸ்கரன் உள்ளிட்ட மரியாதை செலுத்துவதற்காக சென்றுள்ளனர். இந்நிலையில் முன்னாள் அமைச்சர்களான விஜயபாஸ்கர், காமராஜ் மற்றும் பாஸ்கரன் உட்பட அதிமுகவினர் பலர் கார்களில் அணிவகுத்து சென்று கொண்டிருந்தனர். இவர்களுடைய கார் சிவகங்கை அடுத்த மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் சென்று கொண்டிருந்தது.
அப்போது ஒரு கார் குறுக்கே வந்ததாக கூறப்படுகிறது. இதனால் முன்னாள் சென்று கொண்டிருந்த காரின் ஓட்டுநர் திடீரென பிரேக் போட்டுள்ளார். அந்த சமயத்தில் பின்னால் வந்து கொண்டிருந்த மற்ற கார்கள் ஒன்றன்பின் ஒன்றாக மோதியது. இந்த விபத்தில் அதிமுகவின் முன்னாள் அமைச்சர்கள் யாருக்கும் எவ்வித காயமும் ஏற்படவில்லை.
ஆனால் விபத்தில் 6 கார்களுக்கு சேதம் அடைந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து விபத்தில் காயம் அடைந்த அதிமுக நிர்வாகிகள் மணிகண்டன், ஜோதி பாசு, கல்யாணசுந்தரம் மற்றும் மதியழகன் ஆகியோருக்கு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். மேலும் பசும்பொன் நகருக்கு சென்ற இடத்தில் இப்படி ஒரு விபத்து சம்பவம் அரங்கேறியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.