பண மோசடி வழக்கில் 2 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் பகுதியில் நாராயணன் என்பவர் வசித்து வருகிறார். இவர் அதிமுக இளைஞர் இளம்பெண்கள் பாசறை மாவட்ட செயலாளர் ஆவார். இவரிடம் கடந்த 5 வருடங்களாக ஸ்ரீதர் என்பவர் ஓட்டுனராக பணி புரிந்து வந்துள்ளார். கடந்த 3 நாட்களுக்கு முன்பாக ஸ்ரீதரிடம் நாராயணன் 50 லட்சம் ரூபாய் பணத்தை கொடுத்து வீட்டில் கொடுக்குமாறு கூறியுள்ளார். ஆனால் ஸ்ரீதர் பணத்தை வீட்டில் ஒப்படைக்காமல் நாராயணன் வீட்டிற்கு முன்பாக காரை நிறுத்திவிட்டு காரின் சாவியை வீட்டில் இருந்தவர்களிடம் கொடுத்துவிட்டு அங்கிருந்து கிளம்பி சென்று விட்டார். இதனையடுத்து நாராயணன் வீட்டிற்கு வந்து காரை திறந்து பார்த்த போது அதில் பணம் இல்லை. இதனால் சந்தேகப்பட்ட நாராயணன் ஸ்ரீதர் வீட்டிற்கு சென்று பார்த்த போது அவருடைய வீடு பூட்டி கிடந்தது.
இதனால் அதிர்ச்சி அடைந்த நாராயணன் தென்கரை காவல் நிலையத்தி ல் ஸ்ரீதர் மீது புகார் கொடுத்தார். இதே நேரத்தில் ஸ்ரீதரின் மனைவியும் தன்னுடைய கணவரை காணவில்லை என புகார் கொடுத்துள்ளார். இவ்விரு புகார்களின் படி தனித்தனியே வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ஸ்ரீதரை வலைவீசி தேடிவந்த நிலையில் ஸ்ரீதரை இன்று கைது செய்துள்ளனர். இவரிடம் காவல்துறையினர் நடத்திய விசாரணையில் 50 லட்சம் ரூபாய் பணத்தை பெரியகுளம் பகுதியைச் சேர்ந்த காங்கிரஸ் கட்சி பிரமுகர் ஸ்ரீதரிடம் கொடுத்துள்ளதாக கூறியுள்ளார். அதன் அடிப்படையில் மற்றொரு ஸ்ரீதரையும் காவல்துறையினர் கைது செய்து விசாரணை நடத்தியதில் அவரிடமிருந்த 15 லட்ச ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மேலும் காவல்துறையினர் தொடர்ந்து 2 பேரிடமும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்