அதிமுக பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் நாளை காலை 10 மணிக்கு நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் அதிமுக பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்தெடுக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில், அதிமுக பொதுக்குழு கூட்டம் நாளை காலை 10 மணிக்கு நடைபெற உள்ள நிலையில் எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் தங்கள் ஆதரவாளர்களுடன் இன்று தனித்தனியே ஆலோசனை நடத்தினர்.
சென்னை கிரீன்வேஸ் சாலையில் உள்ள தனது இல்லத்தில் அதிமுக பொதுக்குழு உறுப்பினர்களுடன் எடப்பாடி பழனிசாமி ஆலோசனை நடத்தினார். அதேவேளை, தனது ஆதரவாளர்களான வைத்திலிங்கம், வெல்லமண்டி நடராஜன், மனோஜ் பாண்டியன் ஆகியோருடன் ஓ.பன்னீர் செல்வமும் ஆலோசனை நடத்தினார். இந்நிலையில் பொதுக்குழுவில் பங்கேற்க வரும் உறுப்பினர்களுக்கு நவீன தொழில்நுட்பத்திலான அடையாள அட்டை வழங்கப்பட்டுள்ளது. அதாவது மெட்ரோ ரயில் நிலையங்களில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்ப முறையிலான RF கார்டு வைத்திருப்பவர்கள் மட்டுமே அனுமதிக்கப்பட உள்ளதாக கூறப்படுகிறது.