தங்களுடைய ஆட்சிக் காலத்தில் எடுக்கப்பட்ட நடவடிக்கைகளை தொடர்ந்தாலே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் எனவும், தமிழக அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து கொரோனா இரண்டாவது அலையை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் முன்னாள் முதல்வரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி அறிவுரை கூறியுள்ளார்.
சேலம் மாவட்ட அதிமுக மற்றும் கூட்டணிக் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களுடன் சேலம் மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்த எடப்பாடி பழனிசாமி, கொரோனா பரவல் குறித்தும் தடுப்பு நடவடிக்கைகள் குறித்தும் கேட்டறிந்தார்.
பின்னர் சேலம் அரசு மருத்துவமனைக்கு சென்று டீன் வள்ளி சத்தியமூர்த்தி உள்ளிட்டோரை சந்தித்து ஆய்வு மேற்கொண்டார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி கொரோனா பரவலில் தமிழகம் முதலிடத்தில் உள்ளது வேதனை அளிப்பதாகவும் அரசு போர்க்கால அடிப்படையில் நடவடிக்கை எடுத்து இரண்டாவது அலையை கட்டுப்படுத்த வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டார்.
தங்களுடைய ஆட்சி காலத்தில் எடுத்த நடவடிக்கைகளை தொடர்ந்தாலே கொரோனாவை கட்டுப்படுத்த முடியும் என அறிவுரை கூறிய எடப்பாடி பழனிசாமி, தங்கள் ஆட்சியில் இருந்தபோது அன்றாட பாதிப்பு 6900 என்பதே உச்சமாக இருந்த நிலையில் தற்போது அன்றாட பாதிப்பு 35,000-மாக உயர்ந்து விட்டதாக வேதனை தெரிவித்தார்.
ஆக்சிஜன் பற்றாக்குறையை போக்கினால் உயிரிழப்பை தடுக்க முடியும் என்பதால் மத்திய அரசிடம் பேசி கூடுதல் ஆக்சிஜன் பெற வேண்டும் என தமிழக அரசுக்கு வலியுறுத்திய எடப்பாடி இது குறித்து தான் கடிதம் மூலமாக பிரதமரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக குறிப்பிட்டார்.
நாள் ஓன்றுக்கு 3 லட்சம் பேருக்கு கொரோனா ஆய்வு மேற்கொள்ள வேண்டும் எனவும், தற்போது கொரோனா ஆய்வு முடிவுகளை அறிவிக்க மூன்று நாட்கள் எடுத்துக் கொள்வது போல் இல்லாமல் தங்களது ஆட்சியில் இருந்தது போல் 24 மணி நேரத்திற்குள் ரிசல்ட் வெளியிட்டு பாதிக்கப்பட்டவர்களுக்கு மருத்துவம் வழங்க வேண்டுமெனவும் தமிழக அரசுக்கு எடப்பாடி பழனிசாமி அறிவுரை கூறியுள்ளார்.