துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் இளைய மகன் திடீரென சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளது தமிழக அரசியலில் புதிய பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில் மிக விரைவில் சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ளது. அதனால் அனைத்து கட்சிகளும் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டு வருவதால் தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. இதற்கு மத்தியில் சொத்துக்குவிப்பு வழக்கில் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை அனுபவித்து கொண்டிருந்த சசிகலா, தனது நான்கு ஆண்டு சிறை வாசத்தை முடித்து நேற்று முன்தினம் விடுதலையானார்.
இந்நிலையில் துணை முதல்வர் பன்னீர்செல்வத்தின் இளையமகன் ஜெயபிரதீப் திடீரென்று சசிகலாவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளதால் தமிழக அரசியலில் புதிய பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கொரோனாவால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவரும் சசிகலா பூரண குணமடைந்து இனி வரும் காலங்களில் நல்ல உடல் நலம் பெற்று அறம்சார்ந்த பணியில் கவனம் செலுத்தி மன நிம்மதியுடன் மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ இறைவனை வேண்டிக்கொள்கிறேன் என்றும் இது அரசியல் சார்ந்த பதிவு அல்ல என் மனதில் தோன்றியது என்றும் அவர் பதிவிட்டுள்ளார். இது அதிமுக கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.