திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அம்பிளிக்கை பகுதியில் விவசாயியான திருமலைசாமி என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு லட்சுமி என்ற மனைவி உள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு திருமலைசாமி-லட்சுமி தம்பதியினருக்கு கொசவைப்பட்டி பகுதியில் வசிக்கும் காளிமுத்து, செந்தில்குமார் ஆகியோர் அறிமுகம் ஆகியுள்ளனர். அவர்கள் இருவரும் தனியார் நிறுவனம் நடத்தி வருவதாக தெரிவித்துள்ளனர். மேலும் நிதி நிறுவனத்தில் லட்சுமியை சேர்த்தால் நிறைய வருமானம் கிடைக்கும் என ஆசை வார்த்தைகள் கூறியுள்ளனர்.
இதனை நம்பி தம்பதியினர் 35 லட்ச ரூபாயை காளிமுத்து மற்றும் செந்தில்குமாரிடம் கொடுத்தனர். ஆனால் அவர்கள் பங்கு தொகையை கொடுக்காமல் காலம் தாழ்த்தி வந்துள்ளனர். இதனால் தம்பதி கொடுத்த பணத்தை திரும்பி கேட்ட போது செந்தில்குமாரும், காளிமுத்துவும் கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து லட்சுமி திண்டுக்கல் மாவட்ட சைபர் கிரைம் போலீசில் புகார் அளித்தார். அந்த புகாரின் பேரில் வழக்குபதிவு செய்த போலீசார் காளிமுத்து மற்றும் செந்தில்குமார் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.