இந்தோனேசியாவில் அதிகரித்து வரும் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பயணிகள் கப்பல் ஒன்று கொரோனா சிகிச்சை மையமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
கொரோனா தொற்று பரவல் இந்தோனேசியாவின் பல்வேறு மாகாணங்களிலும் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தியுள்ள நிலையில் ஒரே நாளில் அந்நாட்டில் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளதாக பரபரப்பு தகவல் வெளியாகியுள்ளது. இதற்கிடையே இந்தோனேஷிய அரசு கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் கேஎம் உம்சினி என்ற பயணிகள் கப்பல் ஒன்று தொற்று பாதித்தவர்களை தனிமைப்படுத்துவதற்காக தற்காலிக கொரோனா மையமாக மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
மேலும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்காக தெற்கு சுலவேசி பகுதியில் உள்ள கப்பலில் பத்து நாட்கள் தனிமைப்படுத்துவதற்காக மொத்தம் 800 படுக்கைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதோடு மட்டுமில்லாமல் 60 மருத்துவப் பணியாளர்களும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்காக நியமிக்கப்பட்டுள்ளனர். தற்போதைய நிலவரப்படி இந்தோனேசியாவில் கொரோனாவால் இதுவரை 37 லட்சத்து 74 ஆயிரத்து 155 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.