நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனாவால் ஒரே நாளில் மூன்று பேர் உயிரிழந்துள்ளதை தொடர்ந்து பலி எண்ணிக்கை 7 ஆக உயர்ந்திருக்கிறது.
நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே இருக்கிறது. சென்ற 24 மணி நேரத்தில் மட்டும் 55 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதில் பரவை காய்கறி சந்தையில் 9 வியாபாரிகளும்,ஆயுதப் படையை சேர்ந்த 9 காவலர்களும், 4 கர்ப்பிணிகளும், 3 செவிலியர்களும் உட்பட 55 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து நாகப்பட்டினம் மாவட்டத்தில் கொரோனா பாதிப்படைந்தவர்களின் எண்ணிக்கை 657 ஆக உயர்ந்திருக்கிறது. ஒரே நாளில் மட்டும் மூன்று பேர் கொரோனாவால் பலியாகியுள்ளனர்.
சீர்காழியை சேர்ந்த 20 வயது பெண், திட்டச்சேரியை சேர்ந்த 60 வயது மூதாட்டி மற்றும் திருமூலம் பகுதியை சேர்ந்த 50 வயது ஆண் ஆகிய 3 பேர் உயிரிழந்துள்ளனர். அதனால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 7 ஆக உயர்ந்திருக்கின்றது. நாகப்பட்டினத்தில் 360 பேர் குணம் அடைந்துள்ள நிலையில், 290 பேர் சிகிச்சை பெற்றுக் கொண்டிருக்கின்றனர். அதே சமயத்தில் நாகப்பட்டினம் அடுத்துள்ள பரவை காய்கறி சந்தையில் 9 வியாபாரிகளுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளதை தொடர்ந்து இன்று முதல் வருகின்ற ஆகஸ்ட் 1-ஆம் தேதி வரையில் காய்கறி சந்தையை மூடுவதற்கு மாவட்ட ஆட்சியர் பிரவீன் பி.நாயர் உத்தரவு பிறப்பித்துள்ளார்.