ஐரோப்பிய நாடுகளில் இதுவரையிலும் இல்லாத அடிப்படையில் நடப்பாண்டில் அதிக வெப்பஅலை பரவி வருகிறது. இதன் காரணமாக போர்ச்சுகல், ஸ்பெயின் போன்ற இருநாடுகளில் பலி எண்ணிக்கையானது 1,000 கடந்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பிரான்ஸ், இங்கிலாந்திலும் வெப்பஅலை பரவல் மக்களை வாட்டி வதைத்து வருகிறது. வெப்ப அலையால் பல்வேறு இடங்களில் காட்டுத் தீயும் பரவிவருகிறது. இந்நிலையில் ஸ்பெயின் நாட்டில் வயலில் டிராக்டரில் சென்றவர் காட்டுத் தீயில் சிக்கிய பரபரப்பு வீடியோ வெளிவந்துள்ளது.
அந்த வீடியோவில், அந்த நாட்டின் வடமேற்கே தபரா நகரில் ஏஞ்சல்மார்டின் அர்ஜோனா என்பவர் வயல்வெளி ஒன்றில் டிராக்டரில் சென்று பணி செய்து கொண்டிருந்தார். அப்போது வெப்ப அலையால் பரவிய காட்டுத் தீயானது அவர் இருந்த வயலையும் விட்டுவைக்கவில்லை. பின் தீ மளமளவென பரவி வந்தது. தீயை கட்டுப்படுத்துவதற்கான பணியிலும் அவர் ஈடுபட்டுள்ளார். இதற்காக வயலில் டிராக்டரை கொண்டு அகழி ஏற்படுத்தியிருக்கிறார்.
எனினும் வேகமுடன் பரவிய காட்டுத் தீ அவரை தொடர்ந்து வந்து நெருங்கியது. ஒருகட்டத்தில் வேலி பக்கத்தில் டிராக்டரில் திரும்ப முயற்சி செய்த அவரை தீ சூழ்ந்துகொண்டது. உயரே பற்றி எரிந்த தீ மற்றும் புகை மண்டலத்தில் சிக்கிய அர்ஜோனா தப்பிபிழைத்து ஓடி வந்துள்ளார். இதனிடையில் அருகே இருந்த தீயணைப்பு வீரர்கள் உதவிக்கு ஓடிவந்து அவரை மீட்டனர். அதனை தொடர்ந்து படுகாயமடைந்த அவரை ஹெலிகாப்டர் ஒன்றில் சிகிச்சைக்காக கொண்டு சென்றுள்ளனர்.