இருசக்கர வாகனத்தை திருடிய சிறுவன் உள்பட 4 பேரை கைது செய்த போலீசார் 8 இருசக்கர வாகனத்தை பறிமுதல் செய்துள்ளனர்.
நாமக்கல் மாவட்டம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவில் வாகன திருட்டு நடைபெறுவதாக காவல்துறையினருக்கு புகார் எழுந்துள்ளது. அதன் அடிப்படையில் காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் நாமக்கல்-துறையூர் பகுதியில் உள்ள அண்ணாநகரில் காவல்துறையினர் அதிரடி வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அப்பகுதி வழியாக 2 இருசக்கர வாகனத்தில் வந்த நான்கு பேரை சந்தேகத்தின் அடிப்படையில் நிறுத்தி விசாரணை நடத்தியுள்ளனர்.
அந்த விசாரணையில் அவர்கள் நாமக்கல் மேற்கு தெருவை சேர்ந்த சாய் பாலாஜி, சேந்தமங்கலத்தை சேர்ந்த தினகரன், எருமபட்டியை சேர்ந்த பிரகாஷ் மற்றும் கணேசபுரத்தை சேர்ந்த 18 வயது சிறுவன் என்பது தெரியவந்துள்ளது. இதனையடுத்து இவர்கள் ஓட்டி வந்த 2 இருசக்கர வாகனமும் திருடியவை என்பதும் விசாரணையில் வெளிவந்துள்ளது. இதையடுத்து காவல்துறையினர் சிறுவன் உள்பட 4 பேரையும் கைது செய்து 2 சக்கர வாகனத்தையும் பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அவர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தில் வெவ்வேறு இடங்களில் திருடப்பட்ட 6 இருசக்கர வாகனத்தையும் போலீசார் பறிமுதல் செய்துள்ளனர்.