கரூர் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி நேற்று முன்தினம் கடிதம் எழுதி வைத்து தற்கொலை செய்து கொண்டார். அந்த கடிதத்தில், “பாலியல் துன்புறுத்தலில் தற்கொலை செய்து கொண்ட கடைசி பெண் நானாக தான் இருக்க வேண்டும்” என்று எழுதியுள்ளார். இது குறித்து மாணவியின் தாய் மற்றும் உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றுள்ளனர். அப்போது காவல் ஆய்வாளர் கண்ணதாசன் புகார் மனுவை பெறாமல் அவர்களை தகாத முறையில் பேசி, சரமாரியாக அடித்துள்ளார். மேலும் இரவு முழுவதும் விசாரணை என்ற பெயரில் அவர்களை காவல் நிலையத்தில் இருக்க வைத்துள்ளார்.
இதுகுறித்து மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாநில செயலாளர் கோபாலகிருஷ்ணன் அறிக்கை வெளியிட்டுள்ளார். அதில், கரூர் மாவட்டத்தில் 12 ஆம் வகுப்பு படித்து வந்த மாணவி பாலியல் தொந்தரவால் தற்கொலை செய்து கொண்ட செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. மேலும் மனு கொடுக்க வந்தவர்களிடம் மிருகத்தனமாக நடந்து கொண்ட காவல் ஆய்வாளர் கண்ணதாசனை உடனடியாக பணி நீக்கம் செய்ய வேண்டும்.
அது மட்டுமில்லாமல் மாணவியின் மரணத்திற்கு காரணமாக இருந்தவர் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட்டு அவரின் தாய்க்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும்.அதனைப்போலவே கடந்த வாரம் கோவை, திண்டுக்கல் மற்றும் கரூர் ஆகிய 3 மாவட்டங்களில் பாலியல் தொந்தரவால் 2 மாணவிகள் தற்கொலை செய்து கொண்டனர். மேலும் சில மாணவிகள் போலீசில் புகார் அளித்துள்ளனர். எனவே பாலியல் வன்முறைகள் அதிகரித்து கொண்டு வருவதால் உடனடியாக அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். மேலும் மாணவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகளில் பாலியல் குற்ற நடவடிக்கைகள் தடுப்புக்கமிட்டி அமைக்க வேண்டும் என்று அவர் கூறினார்.