இந்தியாவில் மீண்டும் ஊரடங்கு கட்டுப்பாடுகள் செயல்படுத்தப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா, டெல்லி, கர்நாடகா உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது. இதனால் தமிழகம் மற்றும் மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் மக்கள் பொது இடங்களில் முகக்கவசம் அணிவது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கொரோனா வைரஸ் வேகமாக பரவுவதால் 4-வது அலை தொடங்கி விட்டதோ என மக்கள் மிகுந்த அச்சத்தில் இருக்கின்றனர். ஏனெனில் இந்தியாவில் 1 நாளில் மட்டும் 8,084 பேருக்கு தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் இந்தியாவில் மொத்தம் 4 கோடியே 32 லட்சத்து 30 ஆயிரத்து 101 பேர் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
இதுவரை கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 24 ஆயிரத்து 771 பேர் ஆக அதிகரித்துள்ளது. இதன் காரணமாக மத்திய சுகாதாரத்துறை அமைச்சகத்தின் அதிகாரிகளுடன் பிரதமர் நரேந்திர மோடி ஆலோசனை நடத்த இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அந்த ஆலோசனையின் போது தடுப்பூசி செலுத்துதல், கொரோனா பரவலை கட்டுப்படுத்துதல், பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் பாதுகாப்பு நடவடிக்கைகளை அதிகப்படுத்துதல் உள்ளிட்ட பல்வேறு முடிவுகள் எடுக்கப்படும் என கூறப்படுகிறது.