Categories
உலக செய்திகள்

அதிகரிக்கும் துப்பாக்கிசூடு கலாச்சாரம்!…. நொடியில் பறிபோன 12 உயிர்…. பிரபல நாட்டில் பரபரப்பு….!!!!

அமெரிக்க நாட்டில் சென்ற சில வருடங்களாகவே துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. அதாவது அங்கு துப்பாக்கி கலாசாரம் ஒரு தொற்று நோய் போல பரவி வருகிறது. அதிபர் ஜோபைடன் தலைமையிலான அரசு துப்பாக்கி கலாசாரத்துக்கு எதிரான சட்டப் போராட்டம் தொடரும் என்று சூளுரைத்து வந்தாலும், துப்பாக்கி பாதுகாப்பு சட்டத்தில் திருத்தம் செய்வதில் தொடர்ந்து இழுபறி நீடிக்கிறது. இதன் காரணமாக அங்கு துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் தொடர்கதையாகி வருகிறது. அந்நாட்டில் இந்த வருடம் தொடங்கியதிலிருந்து இதுவரையிலும் 350-க்கும் மேற்பட்ட மிகப்பெரிய துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கிறது. இந்நிலையில் நேற்று முன்தினம் ஒரேநாளில் அந்நாட்டின் வெவ்வேறு இடங்களில் நடந்த 4 துப்பாக்கிச்சூடு சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இதில் முதல் துப்பாக்கிச்சூடு சம்பவம் டெக்சாஸ் மாகாணம் ஹூஸ்டன் நகரில் நடைபெற்றது. அதி காலையில் அங்கு வந்த மர்மநபர் ஒருவர் முதலில் ஒரு வீட்டுக்கு தீவைத்தார். இதையடுத்து அவர் மறைவான இடத்துக்கு சென்று பதுங்கினார். இதனிடையில் வீட்டிற்குள் ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தவர்கள் வீடு தீப்பிடித்து எரிவதை உணர்ந்து திடுக்கிட்டு எழுந்தனர். அதன்பின் அவர்கள் அலறியடித்தபடி வெளியே ஓடிவந்தனர். இந்நிலையில் மறைவான இடத்தில் பதுங்கியிருந்த அந்த மர்மநபர் வீட்டிலிருந்து வெளியே ஓடி வந்தவர்களை நோக்கி கண் மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார். இவற்றில் 3 பேரின் உடலில் துப்பாக்கி குண்டுகள் துளைத்து ரத்தவெள்ளத்தில் சரிந்து சம்பவஇடத்திலேயே துடிதுடி இறந்தனர்.

இது தொடர்பாக தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல்துறையினர் துப்பாக்கிச்சூடு நடத்திய நபரை சுட்டுக் கொன்றனர். முதல் கட்ட விசாரணையில் தாக்குதல் நடத்திய அந்நபர் 40 வயதான ஆப்பிரிக்க வம்சாவளி என்பது தெரியவந்துள்ளதாக கூறிய காவல்துறையினர் துப்பாக்கிச்சூட்டின் பின்னணி பற்றி தீவிரமாக விசாரித்து வருவதாக தெரிவித்தனர். இந்த சம்பவம் நடைபெற்ற அடுத்த சிலமணி நேரத்தில் டெக்சாஸ் மாகாணத்தின் போர்ட் வொர்த் நகரில் காரில் வந்த மர்மநபர் ஒருவர் வீட்டுக்கு வெளியே நின்று கொண்டிருந்த சிறுவர்களை துப்பாக்கியால் சுட்டுவிட்டு தப்பிசென்றார்.

இதனால் 17 வயது சிறுவன் மற்றும் 5 வயது பச்சிளம் குழந்தை சம்பவ இடத்திலேயே பலியாகினர். அத்துடன் மேலும் ஒரு சிறுவன் படுகாயம் அடைந்தான். துப்பாக்கிச் சூடு நடத்திவிட்டு தப்பிசென்ற மர்மநபரை காவல்துறையினர் தேடி வருகின்றனர். இதற்கிடையில் மிச்சிகன் மாகாணத்திலுள்ள டெட்ராய்ட் நகரில் ஒரே நபர் நகரின் வெவ்வேறு பகுதிகளுக்கு சென்று கண்ணில் பட்டவர்களையெல்லாம் துப்பாக்கியால் சுட்டுத்தள்ளினார். இவற்றில் 40 வயது மதிக்கத்தக்க ஒரு பெண் உள்பட 3 பேர் கொல்லப்பட்டனர். ஒருவர் படுகாயமடைந்தார்.

கண்காணிப்பு கேமராவில் பதிவாகிய கொலையாளியின் புகைப்படத்தை வெளியிட்டு அவரை காவல்துறையினர் தேடி வந்தனர். இந்நிலையில் காவல்துறையினர் நீண்ட நேர தேடுதல் வேட்டைக்கு பின் அவரை கைது செய்தனர். அதனை தொடர்ந்து 4வது துப்பாக்கிச்சூடு சம்பவம் ஒரேகான் மாகாணத்திலுள்ள ஒரு சூப்பர் மார்க்கெட்டில் நடைபெற்றது. பென்ட் நகரிலுள்ள அந்த சூப்பர் மார்க்கெட்டுக்குள் உள்ளூர் நேரப்படி இரவு 7மணிக்கு மர்மநபர் ஒருவர் துப்பாக்கியுடன் நுழைந்தார். அவர் சூப்பர்மார்க்கெட்டில் பொருட்களை வாங்கி கொண்டிருந்தவர்களை துப்பாக்கியால் சரமாரியாக சுட்டார். இதனால் 2 பேர் பலியாகினர். அதன்பின் அந்த மர்மநபர் துப்பாக்கியால் சுட்டு தற்கொலை செய்துகொண்டார். இவ்வாறு ஒரே நாளில் 4 இடங்களில் நடந்த துப்பாக்கிச்சூடு சம்பவங்களில் மொத்தம் 12 பேர் உயிரிழந்தனர்.

Categories

Tech |