நடப்பாண்டில் அமெரிக்க நாட்டில் பெரியளவில் 381 துப்பாக்கிசூடு சம்பவங்கள் அரேங்கேறியுள்ளது. இது நாள் ஒன்றுக்கு சராசரியாக 1.7க்கும் கூடுதலான பெரியளவிலான துப்பாக்கிசூடு எண்ணிக்கை ஆகும். அந்த நாட்டில் அதிகரித்துவரும் துப்பாக்கி வன்முறைக்கு வேதனை தெரிவித்த அதிபர் பைடன், குழந்தைகள் மற்றும் குடும்பத்தினரை பாதுகாக்க தாக்குதல் நடத்தகூடிய ஆயுதங்களை தடைசெய்ய வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது என கூறினார். இதையடுத்து சென்ற ஜூன் 22ஆம் தேதி துப்பாக்கி பாதுகாப்பு மசோதா கொண்டு வருவதற்கான முடிவுக்கு அமெரிக்க நாடாளுமன்றம் ஒப்புதல் வழங்கியது. இருப்பினும் இந்த மசோதாவானது தாக்குதல் நடத்தும் துப்பாக்கிகளுக்கு தடைவிதிக்காது.
எனினும் ஆபத்துக்குரிய தனிநபர்களுக்கு ஆயுதங்கள் கிடைக்காமல் தடுக்கசெய்யும். மக்களிடையே புது மனநலத்திற்கான நிதியுதவிக்கும், இம்மசோதா வழிவகை செய்கிறது. இந்நிலையில் அமெரிக்காவில் நேற்று பல இடங்களில் துப்பாக்கிசூடு சம்பவங்கள் நடந்துள்ளது. அந்த வகையில் அமெரிக்காவில் வட கிழக்கு வாஷிங்டனில் கேபிட்டல் ஹில் பகுதியிலிருந்து சற்று தொலைவில் நேற்றிரவு 8:30 மணியளவில் திடீரென்று துப்பாக்கிசூடு நடந்துள்ளது. இதை தீயணைப்புதுறையின் செய்தி தொடர்பாளர் விட்டோ மேகியோலோ தெரிவித்துள்ளார். இதுகுறித்து தி வாஷிங்டன் போஸ்ட் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில், மெட்ரோபொலிடன் நகர காவல்துறை வெளியிட்டுள்ள அறிக்கையின் அடிப்படையில் துப்பாக்கிசூட்டில் பலர் பலியாகி இருக்ககூடும் என தெரிவித்துள்ளது. இருந்தாலும் சரியான எண்ணிக்கை அடங்கிய விபரங்கள் வெளியிடவில்லை.
அத்துடன் பாதிக்கப்பட்டவர்கள் யாரும் அடையாளம் காணப்படவில்லை. மேலும் சந்தேகத்திற்கு உரிய தகவல் எதுவும் வரவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. பின் காவல்துறை செய்தி தொடர்பாளர் சீன் ஹிக்மேன் கூறியதாவது, சம்பவம் நடைபெற்ற தெருவில் ஆம்புலன்சுகள் வரிசையாக சென்றது. அப்பகுதியில் நின்றிருந்த பெண் ஒருவர் 15 முறை துப்பாக்கிசூடு நடந்த சத்தம் கேட்டது என அச்சத்துடன் கூறினார் என தெரிவித்துள்ளார். அமெரிக்காவில் சென்ற ஞாயிற்றுகிழமை இதுபோன்ற வன்முறை சம்பவமானது நடந்தது. அமெரிக்க நாட்டின் புளோரிடா மாகாணத்தில் ஆர்லேண்டோ நகரில் மக்கள்கூட்டத்தில் திடீரென்று ஒருவருக்கொருவர் மோதல் ஏற்பட்டு வன்முறையானது பரவியது. இவற்றில் அடையாளம் தெரியாத மர்மநபர் ஒருவர் மறைத்து வைத்திருந்த கைத்துப்பாக்கி ஒன்றை எடுத்து கூட்டத்தினரை நோக்கி சுட்டார்.
இந்த துப்பாக்கிசூட்டில் 7 பேர் காயம் அடைந்தனர். அண்மையில் டெக்சாஸில் ஹால்தம் நகரில் நடைபெற்ற துப்பாக்கிசூட்டில் 2 பேர் கொல்லப்பட்டனர். 3 அதிகாரிகள் உட்பட 4 பேர் காயமடைந்தனர். இந்த நிலையில் வாஷிங்டன் துப்பாக்கிசூடு குறித்து காவல்துறை தலைவர் ராபர்ட் ஜே செய்தியாளர்கள் சந்திப்பில் பேசும்போது, இந்த சம்பவத்தில் ஒருவர் பலியாகியுள்ளார். அத்துடன் 5 பேர் வரை காயமடைந்து இருக்கின்றனர். அவ்வாறு காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக கொண்டு செல்லப்பட்டுள்ளனர். இதற்கிடையில் துப்பாக்கசூடு நடத்தியதற்கான காரணம் தெரியவரவில்லை. அவர்கள் ஒருவரை ஒருவர் அறிந்தவர்களா..? என்பதும் தெரியவில்லை. துப்பாக்கிசூடு நடந்தபோது மக்கள் கூட்டம் அதிகளவில் இருந்திருக்ககூடும். இதுபற்றி தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது என்று கூறியுள்ளார்.
நம் சமூகத்தில் இருப்பவர்கள் தங்களது மனித தன்மை உணர்வை இழந்துவிட்டனர் என்று தெரிகிறது எனவும் அவர் கூறியுள்ளார். இதேபோல் அமெரிக்காவில் வேறு 3 இடங்களிலும் நேற்று துப்பாக்கிசூடு அரேங்கேறியுள்ளது. கெயின்ஸ்வில்லே தெருவில் நடைபெற்ற துப்பாக்கிசூட்டில் பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். மேலும் நியூட்டன் பிளேஸ் பகுதியில் ஆடவர் ஒருவரும், ஆகிள் தோர்ப் தெரு பகுதியில் மற்றொருவரும் காயமடைந்து இருக்கின்றனர். இத்தாக்குதல் ஒரு சில மணி நேர இடைவெளியில் நடந்துள்ளது. இதன் காரணமாக அமெரிக்காவில் நேற்று ஒரேநாள் இரவில் பல இடங்களில் நடந்த துப்பாக்கிசூட்டில் ஒருவர் உயிரிழந்தும், பெண் உட்பட 8 பேர் வரை காயமடைந்தும் இருக்கின்றனர். இதனால் உலகநாடுகளுக்கு ஆயுதங்களை விநியோகிப்பதில் தடையின்றி செயல்பட்டுவந்த அமெரிக்காவில், உள் நாட்டிலேயே ஆயுத கலாசாரம் தலைதூக்கி அதனால் பொதுமக்கள் பாதிக்கப்படகூடிய அவலநிலையானது ஏற்பட்டுள்ளது.