உரக்கடை உரிமையாளரை தாக்கிய குற்றத்திற்காக இருவரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஆரோக்கியபுரத்தில் அன்பழகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் தூத்துக்குடியிலிருந்து எட்டயபுரம் செல்லும் சாலையில் உரக்கடை வைத்துள்ளார். இந்நிலையில் அய்யாத்துரை என்பவர் அன்பழகனின் கடையில் தினமும் ரூபாய் 2000-க்கு தனது கால்நடைகளுக்கு தீவனம் வாங்கியுள்ளார். பின்னர் அய்யாத்துரை தினமும் கால்நடை தீவனம் வாங்கியதற்காக கமிஷன் தொகை கேட்டுள்ளார். அதற்கு அன்பழகன் மறுப்பு தெரிவித்ததால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
அதன்பின் அய்யாத்துரை, சஞ்சய் மற்றும் சில நபர்கள் சேர்ந்து கல் மற்றும் கம்பால் அன்பழகனை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இந்த சம்பவம் குறித்து அன்பழகன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் தகவலறிந்த காவல்துறையினர் அய்யாத்துரை மற்றும் சஞ்சய் ஆகிய 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் அவர்களுடன் இருந்த சில நபர்களை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.