தமிழகத்தில் இயக்கப்பட்டு வரும் 13 சிறப்பு ரயில்களில் 70 சதவீதம் ரயில் டிக்கெட்டுகள் முடிந்துள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சென்னையிலிருந்து திருச்சி, மதுரை, கோயம்புத்தூர் உட்பட பல்வேறு வழித்தடங்களில் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. 2021 ஆம் ஆண்டு ஜனவரி 14 முதல் 17 ஆம் தேதி வரை பொங்கலுக்கு நான்கு நாட்கள் விடுமுறை வருகிறது. இதனையொட்டி சிறப்பு ரயில்கள் விடப்பட்டு வருகின்றன. அதன்படி ஜனவரி 12 13ம் தேதிகளில் விரைவு ரயில்களில் படுக்கை வசதி கொண்ட டிக்கெட்டுகள் பெரும்பாலும் விற்றுவிட்டதாக ரயில்வே துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக ரயில்வே அதிகாரியிடம் கேட்டபோது: “வழக்கமாக இயக்கப்படும் பயணிகள் ரயில் சேவை இன்னும் தொடங்கப்படவில்லை. 4 மாதத்துக்கு முன்பே முன்பதிவு செய்யும் வசதி இருப்பதால் பொங்கலுக்கு சொந்த ஊருக்கு செல்ல விரும்புபவர்கள் முன்பதிவு செய்து உள்ளனர். குறிப்பாக தென் மாவட்டங்களுக்கு இயக்கப்படும் சிறப்பு ரயில்கள் 70% இடங்கள் நிரம்பிவிட்டன. ஏசி பெட்டியில் மட்டும் டிக்கெட்டுகள் காலியாக உள்ளது. அடுத்த மாதம் இறுதியில் பயணிகளின் தேவை குறித்து ஆய்வு நடத்தப்பட்டு கூடுதல் ரயில்கள் இயக்க படுவதற்கான நடவடிக்கை எடுக்கப்படும்” என்று அவர் கூறினார்.