தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. கடந்த மே 10ஆம் தேதி முழு ஊரடங்கு அமல் படுத்தப்பட்ட நிலையில், அதன் பலனாக கொரோனா பாதிப்பு கணிசமாக குறைந்து கொண்டே வருவதால் தமிழகத்தில் ஜூன் 14 ஆம் தேதி வரை ஊரடங்கு நீட்டிப்பு படுவதாக முதல்வர் அறிவித்தார். அதுமட்டுமல்லாமல் கொரோனா பாதிப்பு அதிகமுள்ள மாவட்டங்களில் சில கட்டுப்பாடுகளும், எஞ்சிய மாவட்டங்களில் கூடுதல் தளர்வுகளும் அளிக்கப்பட்டு தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் உள்ளது.
இந்நிலையில் தமிழகத்தில் மேலும் ஊரடங்கு நீட்டிப்பு குறித்தும், பாதிப்பு குறைவான மாவட்டங்களில் மதுபான கடைகள் திறப்பது குறித்து ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியானது. மேலும் தனியார் பால் கடை திறப்பது குறித்து தமிழ்நாடு அரசு ஆலோசனை நடத்துவதாக ஊடகத்தில் செய்தி வெளியானது. இந்த யோசனையை கண்டித்துள்ள அன்புமணி ராமதாஸ், இந்த திட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக கைவிட வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளார். “அண்ணா உருவாக்கிய கட்சியின் ஆட்சியில் தனியார் பார்கள் அனுமதிக்கப்பட்டால், அதை அண்ணாவின் ஆன்மா மன்னிக்காது” என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.