மார்பர்க் வைரஸ் வெளவால் போன்ற விலங்குகள் மூலம் மனிதர்களுக்கும் பரவுகின்றது.
ஆப்பிரிக்க நாட்டில் கானா என்ற பகுதி அமைந்துள்ளது. இந்த பகுதியில் சமீபமாக ‘மார்க்பர்க்’ என்ற வைரஸ் பரவுகிறது. இந்த வைரசால் இருவர் உயிரிழந்துள்ளனர். இதன் பாதிப்பு எபோலா வைரசை போன்று கடுமையாக உள்ளது என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. இது குறித்து உலக சுகாதார நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது, “கானாவில் நடத்தப்பட்ட பரிசோதனையில் இந்த இருவருக்கும் மார்க்பர்க் வைரஸ் இருப்பது உறுதியாகியுள்ளது. இருப்பினும் செனகலில் உள்ள ஆய்வுக்கூடத்தில் இதன் முடிவு உறுதி செய்த பின்பு வைரஸை உறுதிப்படுத்த முடியும் எனக் கூறியுள்ளது. மேலும் இந்த வைரஸின் அறிகுறி வயிற்றுப்போக்கு, காய்ச்சல், குமட்டல் மற்றும் வாந்தி போன்ற அறிகுறிகள் இருக்கும்” என்று கூறப்பட்டுள்ளது.
இந்த பரிசோதனையில் வைரஸ் தொற்று உறுதியானால், இரண்டாவது பாதிப்பு பொதுவாக இருக்கும். கடந்த ஆண்டு கினியாவில் ஒருவருக்கு மார்க்பர்க் வைரஸ் உறுதியானது. அதன் பிறகு வேறு யாருக்கும் இந்த தொற்று கண்டறியப்படவில்லை. இருப்பினும் இந்த சோதனை முடிவு வருவதற்கு முன், தேவையான நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. 1967 ஆம் ஆண்டு முதல் இதுவரை 12 முறை கிழக்கு மற்றும் தென் ஆப்பிரிகாவில் இந்த வைரஸ் பரவியுள்ளதாகவும், இதன் இறப்பு விகிதம் 24 % இருந்து 88 % வரை வைரஸின் தீவிர தன்மையைப் பொறுத்து மாறியுள்ளதாகவும் உலக சுகாதார நிறுவனம் தெரிவித்துள்ளது. மேலும் மார்பர்க் வைரஸ் தொற்றுக்குள்ளான வெளவால் போன்ற விலங்குகள் மூலம், மனிதர்களுக்கும் இந்த தொற்று ஏற்படும் எனக் கண்டறியப்பட்டிருக்கின்றது. இந்த தொற்றுக்குள்ளான மனிதர் மூலம் பிறருக்கும் இது போன்ற வைரஸ் பரவும். இதனை தொடர்ந்து வெளவால்கள் வசிக்கும் குகைகள் போன்ற பகுதிகள் அருகில் செல்ல வேண்டாம் என்றும், அசைவ உணவுகளை நன்கு சமைத்து உண்ண வேண்டும் என்றும் கானா மக்களுக்கு அந்நாட்டு சுகாதாரத் துறை அதிகாரிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.