Categories
மாநில செய்திகள்

“அடுத்தடுத்து 7 பெட்ரோல் குண்டுகள் வீச்சு” கோவையில் நீடிக்கும் பதட்டம்….. தீவிர பாதுகாப்பு பணியில் போலீசார்….!!!!

கோயம்புத்தூர் மாவட்டத்தில் கடந்த 3 நாட்களாகவே பெரும் பதற்றம் நீடித்து வருகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள இந்து அமைப்பினர், ஆர்எஸ்எஸ் மற்றும் பாஜகவினரை குறிவைத்து 7 பெட்ரோல் குண்டுகள் வீசப்பட்டுள்ளது‌. அதோடு வாகனங்களை அடித்து நொறுக்குதல் மற்றும் தீ வைத்தல் போன்ற சம்பவங்களும் நடைபெற்று வருகிறது. இதன் காரணமாக கோயம்புத்தூர் மாவட்டத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. இந்த பாதுகாப்பு பணிக்காக தமிழ்நாடு கமாண்டோ படையை சேர்ந்த 50-க்கும் மேற்பட்ட போலீசார் மற்றும் தூத்துக்குடி, நெல்லை, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, தஞ்சாவூர், அரியலூர், கரூர், புதுக்கோட்டை, திருச்சி மற்றும் சேலம் ஆகிய பகுதிகளில் இருந்து 1700 போலீசாரும் வரவழைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களுடன் கோவை மாநகர காவல் துறையினரும் இணைந்து தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். அதன் பிறகு மாவட்டத்திற்குள் நுழையும் 11 வழிகளில் புதிதாக சோதனை சாவடிகள் அமைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து 15 காவல் நிலையங்களில் இருந்தும் தலா 3 வாகனங்கள் வீதம் 45 வாகனங்களில் காவல்துறையினர் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். இதேபோன்று ரயில்வே நிலையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

பயணிகளின் உடைமைகள் முழுமையாக சோதனை செய்யப்பட்ட பிறகு அவர்கள் மாவட்டத்திற்குள் வருவதற்கு அனுமதிக்கப்படுகிறார்கள். மேலும் கோவை மாநகர உளவுத்துறை உதவி ஆணையராக பார்த்திபனும், சிறப்பு புலனாய்வு பிரிவு உதவி ஆணையாளராக அருணும் நியமிக்கப்பட்டனர். இந்த உத்தரவை தமிழக டிஜிபி சைலேந்திரபாபு பிறப்பித்தல் நிலையில், கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மேற்கு மண்டல ஐஜியுடன் பெட்ரோல் குண்டு வீச்சு தொடர்பாக தலைமைச் செயலாளர் இறையன்பு ஆலோசனை நடத்தியுள்ளார்.

Categories

Tech |