அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி மாணவர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள கும்பகோணத்தில் மிகப்பழமையான தன்னாட்சி அரசு கலைக்கல்லூரி அமைந்துள்ளது. இந்த கல்லூரியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படித்து வருகின்றனர். இந்நிலையில் இந்த கல்லூரியில் போதிய அளவில் குடிநீர், கழிவறை போன்ற அடிப்படை வசதிகள் இல்லாததால் மாணவர்கள் சிரமப்பட்டு வருகின்றனர். இதுகுறித்து மாணவர்கள் கல்லூரி நிர்வாகத்திடம் பலமுறை மனு அளித்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்காததால் ஆத்திரமடைந்த மாணவர்கள் அடிப்படை வசதிகள் செய்து தரக்கோரி வகுப்புகளை புறக்கணித்து கல்லூரி வளாகத்தில் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுகுறித்து தகவல் அறிந்த கல்லூரி நிர்வாகத்தினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட மாணவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து மாணவர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.