செல்போன் இன்றைய தேவைகளில் முக்கியமான ஒன்றாக மாறியுள்ளது. நாம் எது இல்லாமல் இருக்கிறோமோ இல்லையோ செல்போன் இல்லாமல் மட்டும் இருப்பதே இல்லை. முன்பெல்லாம் ஒருவரையொருவர் தொடர்பு கொள்வதற்கு மட்டும் பயன்படுத்தப்பட்டு வந்த செல்போன் தற்போது அனைத்து தேவைகளுக்குமான ஒன்றாக மாறிவிட்டது. அதிலும் தற்போது 100-ல் 90 சதவீதத்துக்கும் அதிகமான மக்கள் ஆண்ட்ராய்டு செல்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். விலை உயர்ந்த செல்போன்களை பணக்காரர்கள் மட்டும் பயன்படுத்துகிறார்கள் என்பது கிடையாது. மிடில்கிளாஸ் வாழ்க்கையை வாழும் நபர்கள் கூட 15 ஆயிரம் முதல் ஒரு லட்சம் வரையிலான விலை உயர்ந்த செல்போன்களை பயன்படுத்தி வருகின்றனர். ஒரு சிலர் தங்களின் தேவைகளுக்காக விலை உயர்ந்த செல்போன்களை வாங்குகின்றனர். ஒரு சிலர் தங்களின் ஆசைக்காக வாங்குகின்றனர்.
எப்படி பார்த்தாலும் செல்போன் இல்லாத நபர்களே இல்லை என்ற அளவிற்கு தான் வாழ்க்கை நகர்ந்து கொண்டு செல்கிறது. இப்படி அதிகம் செலவழித்து தங்களுக்கு பிடித்த செல்போன்களை வாங்கும் நபர்கள் அதனை எத்தனை நாளைக்கு அதை பத்திரமாக வைத்திருப்பார்கள் என்று கேட்டால் அதிகபட்சம் ஒரு மாதம். அதன் பிறகு தங்களின் கவனக்குறைவு காரணமாக அதனை அடிக்கடி கீழே போட்டு விடுவார்கள். அதிலும் வீடுகளில் சிறு குழந்தைகள் இருந்தால் சொல்லவே தேவையில்லை. செல்போன்களை விளையாட்டு பொருளாக எண்ணி விளையாடும் குழந்தைகள் அதனை கீழே போட்டு நொறுக்கி விடுகிறார்கள்.
அதுமட்டுமில்லாமல் நாம் வெளியில் செல்லும் போது, பேருந்தில் செல்லும் போது, பைக்கில் செல்லும் போது, செல்பி எடுக்கும் போது, நமது பேன்ட் பாக்கெட்டில் இருந்து வெளியில் எடுக்கும் போது செல்போன் தவறுதலாக கீழே விழக்கூடிய நிலைமை ஏற்படும். அந்த சமயத்தில் செல்போனை பத்திரமாக வைக்க வேண்டுமென்றால் அதற்கு ஒரு ரப்பர் பேண்ட் போதும். அது எப்படி என்பதை இதில் தெரிந்து கொள்வோம். இதற்கு முதலில் உங்களது செல்போன் கவரை கழட்டி கொண்டு அதில் சார்ஜ் போடுவதற்கான இடத்தில் ஒரு சிறிய வளைவு போன்ற அமைப்பு இருக்கும். இதில் ஒரு ரப்பர் பேண்டை எடுத்துக்கொண்டு அதனை போன் கவர்களின் உள்ளே பகுதியும், அதன் வெளியே பகுதியும் இருக்கும் படி வைத்துக் கொள்ள வேண்டும். அதன் பிறகு செல்போன்களை அந்த கவருக்குள் போட்டுவிடுங்கள்.
இப்போது கீழே உள்ள ரப்பர் பேண்டில் உங்களது கையின் ஒரு விரலை உள்ளே நுழைத்து பத்திரமாக பிடித்துக்கொண்டால், கீழே விழாது. ஒருவேளை செல்போன் தவறுதலாக கையை விட்டு நழுவினாலும் அது அந்த விரல்களில் மட்டுமே இருக்கும் தவிர தவறிக் கீழே விழுவதற்கு வாய்ப்பில்லை. இதில் அந்த ரப்பர் பேண்டின் தரமும் மிக முக்கியம். இந்த ரப்பர் பேண்டை பயன்படுத்தி தற்காலிகமாக நமது செல்போன் டிஸ்ப்ளே உடையாமல் டேமேஜ் ஆகாமல் பாதுகாத்து வைத்துக் கொள்ள முடியும். நீங்களும் உங்கள் வீட்டில் ரப்பர் பேண்ட் இருந்தால் அதை வைத்து இப்படி முயற்சி செய்து பாருங்கள்.