பீகார் பரௌனி பகுதியிலுள்ள கர்ஹாரா பணிமனைக்குக் கொண்டுவரப்பட்ட டீசல் ரயில் எஞ்ஜினை ஒரு கும்பல் திருடிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. ஒட்டு மொத்தமாக எஞ்ஜினை கொண்டு செல்ல முடியாது என்பதால், சிறுகசிறுக தினசரி ஒவ்வொரு பாகமாகக கழற்றிச் சென்று ஒரு கட்டத்தில் ஒட்டுமொத்த என்ஜினும் காணாமல்போன பிறகுதான் பணிமனையில் இச்சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இது தொடர்பாக புகாரளிக்கப்பட்ட நிலையில் மூன்று பேர் கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து என்ஜினின் 13 பாகங்கள் பழைய இரும்புச்சாமான்களை வாங்கும் கடையிலிருந்து காவல்துறையினர் மீட்டுள்ளனர். இதில் முக்கியமான ஒன்று என்னவென்றால், இந்த ரயில் பணிமனை அருகில் ஒரு சுரங்கப்பாதை இருப்பதை திருடர்கள் கூறித்தான் காவல்துறையினர் கண்டுபிடித்தனர்.
அதாவது இரவு வேளையில் அந்த சுரங்கப் பாதை வழியாக வரக்கூடிய திருடர்கள், நைசாக என்ஜின் பாகங்களை கழற்றி சென்றுள்ளனர். அதேபோல் பீகார் அராரியா மாவட்டத்தில் பாயும் சிதாதார் ஆற்றின் மீது அமைந்துள்ள பாலத்தையே ஒரு கும்பல் திருட முயற்சி செய்தனர். இது தொடர்பாக காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து பாலத்துக்கு தற்போது காவல் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.