நாட்டின் 75 சுகந்திர தின விழா இன்று வெகு விமர்சையாக கொண்டாடப்பட்டு வருகிறது. அதனைத்தொடர்ந்து நாட்டின் 75 சுதந்திர தின விழாவை முன்னிட்டு பொதுமக்கள் தங்களது வீடுகள், கடைகள், நிறுவனங்கள் மற்றும் வாகனங்களில் தேசியக்கொடி ஏற்ற வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்தார். இதை மேலும் தீவிர படுத்தும் விதமாக நாடுமுழுவதும் பா.ஜனதாவினர் தேசிய கொடியை மொத்தமாக வாங்கி வீடுகள், கடைகளுக்கு விநியோகம் செய்தனர். அதன்படி குமரி மாவட்டத்தில் பா.ஜனதா சார்பில் தேசியக்கொடி விநியோகம் நடைபெற்றது. இந்நிலையில் மாவட்டத்தில் பல்வேறு பகுதிகளில் வீடுகளில் பொதுமக்கள் தேசியக்கொடி ஏற்றி உள்ளனர்.
அதோடு கடைகளின் முகப்புகள், கல்வி நிறுவனங்கள், அரசு அலுவலகங்களிலும் தேசிய கொடி ஏற்றப்பட்டுள்ளது. அதிலும் நாட்டுப்பற்று அதிகமுடையவர் சிலர் தங்களது இரு சக்கர வாகனத்திலும் தேசியக்கொடி கட்டி இருக்கிறார்கள். மேலும் ஆட்டோக்கள், கார்களில் தேசியக்கொடி கம்பீரமாக பறக்கிறது. நாகர்கோயில் சந்திப்பு ரயில் நிலையத்தில் 100 அடி உயர கம்பத்தில் தேசியக்கொடி பறக்கிறது. இதற்கிடையில் நேற்று வழிபாட்டுத் தலங்களிலும் தேசியக்கொடி ஏற்றப்பட்டது. சுசீந்திரம் தாணுமாலய சுவாமி கோவில், வடசேரி பள்ளிவாசல், வெட்டூர்ணிமடம் கிறிஸ்துவ ஆலயம் உள்ளிட்ட பல்வேறு வழிபாடு தளங்களில் தேசியக்கொடி ஏற்றப்பட்டுள்ளது. மேலும் தேசிய கொடியை சமூக வலைதளங்களிலும் முகப்பு புகைப்படமாக வைக்கப்பட்டிருக்கிறது. அதாவது வாட்ஸ் அப், டிவிட்டர் மற்றும் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களை பயன்படுத்துப்பவர்கள் அதில் தங்களது புகைப்படத்தை நீக்கிவிட்டு தேசியக்கொடியை புகைப்படமாக வைத்து வருகிறார்கள்.