தி.நகர் ஸ்கைவாக் திட்டப் பணிகள் 90% முடிவடைந்ததுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக சென்னை மாநகராட்சி சார்பில் பல்வேறு விஷயங்கள் செயல்படுத்தபட்டு வருகிறது. அந்த வகையில் தி.நகர் ஸ்கைவாக் பாலம் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் அறிவிக்கபட்டதில் மிகவும் முக்கியத்துவம் பெற்றது. ஏனென்றால் தினம்தோறும் மூச்சு திணறும் அளவிற்கு வாகன நெரிசல்களும், மக்கள் கூட்டமும் நிறைந்து காணப்படும் பகுதி தி.நகர். அதிலும் குறிப்பாக ரங்கநாதன் தெருவில் உள்ளே சென்று விட்டாலே எப்போது வெளியே வருவோம் என்ற அளவிற்கு மூச்சு திணறல் ஏற்பட்டுவிடும். மாம்பழம் ரயில் நிலையம் மற்றும் கடைவீதிகளுக்கு செல்வதற்காக பொதுமக்கள் இந்த வழியை பயன்படுத்துவதால் அதிக அளவில் கூட்ட நெரிசல் ஏற்படுகிறது.
இந்த கூட்ட நெரிசலை சமாளிக்கும் விதமாக அறிமுகம் செய்யப்பட்டது தான் ஸ்கைவாக் திட்டமாகும். 600 மீட்டர் நீளத்தில், 4 மீட்டர் அகலத்தில் மேம்பாலம் உருவாக்கும் பணிகள் கடந்த 2020-ஆம் வருடம் தொடங்கப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்காக சுமார் 27 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இந்தப் பகுதியில் மக்கள் நடமாட்டம் அதிக அளவில் இருப்பதனால் பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தாமல் பணிகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டு 15 மாதங்களில் கட்டி முடிக்க திட்டமிட்டுள்ளனர். ஆனால் கொரோனா பெருந்தொற்று, ஒப்பந்ததாரர்களுக்கு நிலுவைத் தொகை, ஊழியர்கள் பற்றாக்குறை, மேம்பால திட்ட வடிவமைப்புகளில் மாற்றம் போன்ற பல்வேறு காரணங்களினால் பணி செய்வதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்த பணிகள் தற்போது வேகமடைந்துள்ளது. தி.நகர் பேருந்து நிலையத்திற்குள் இறங்கும் வழித்தடம் கிட்டத்தட்ட இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அதாவது ஒட்டுமொத்தமாக 90 சதவித பணிகள் நிறைவடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த ஸ்கைவாக் பாலத்தில் ஏறுவதற்கு படிக்கட்டுகள் அமைக்கப்பட்டு வந்தது. இதில் மாற்றுத்திறனாளிகள் மற்றும் வயதானவர்கள் பயன்படுத்த சிரமமாக இருப்பதினால் லிப்ட் மற்றும் எஸ்கலேட்டர் வசதிகள் கொண்டுவர திட்டமிடப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் ஸ்கைவாக் பாலத்தில் பேட்டர் வாகனங்களை பயன்படுத்தவும் முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகி உள்ளது.