கேரளாவின் முதல் பெண் அரசு ஆம்புலன்ஸ் ஓட்டுனராக கோட்டயத்தை சேர்ந்த தீபா மோல் என்பவர் பொறுப்பை ஏற்றுக் கொண்டுள்ளார்.
தமிழகம், கேரளா உள்ளிட்ட சில மாநிலங்களில் தேசிய ஊரக சுகாதார திட்டத்தின் கீழ் 108 ஆம்புலன்ஸ் சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சேவை எல்லா நாட்களிலும் 24 மணி நேரமும் செயல்பட்டு வருகிறது. அந்த வகையில் கேரள மாநிலத்தில் 108 என்ற பெயரில் இந்த சேவை செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கேரள மாநிலத்தின் முதல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுநராக தீபாமோல் பணியை ஏற்றுக் கொண்டார். நேற்று சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்படுவதையொட்டி அவர் தனது பணியை ஏற்றுக் கொண்டுள்ளார்.
அவருக்கு ஆம்புலன்ஸ் சாவியை கேரள சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் வழங்கி கவுரவித்தார். இதுபற்றி சுகாதாரத்துறை அமைச்சர் வீணா ஜார்ஜ் பேசும் போது, உங்கள் அனைத்து துறைகளிலும் ஈடுபட வேண்டும் என்பதை மையமாகக் கொண்டு ஆர்வம் உடைய பெண்களை நியமிக்க அரசு முயற்சி எடுத்துள்ளது. இத்தகைய நடவடிக்கைகள் மூலம் பெண்கள் மீது காலங்காலமாக இருந்துவரும் எதிரான கருத்துக்களை உடைக்க முடியும். மேலும் பெண்கள் தாங்கள் விரும்பும் துறைகளில் ஈடுபட உதவும் நோக்கில் இந்த முயற்சி அமைந்துள்ளது.
தீபா மோல் அனைவருக்கும் ஒரு முன்மாதிரியாக திகழ்கிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துக்கள். மேலும் அடுத்தடுத்த மாவட்டங்களிலும் இது போல் பெண் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் நியமிக்கப்படுவார்கள் என கூறியுள்ளார். கேரளாவின் முதல் பெண் அரசு ஆம்புலன்ஸ் ஓட்டுநராக பொறுப்பேற்றது பற்றிய தீபா மோல் கூறும்போது, என்னுடைய கனவு நிறைவேறியது. எனது கனவை நிறைவேற்ற உதவியவர்களுக்கு மிகவும் நன்றி. பெண்கள் சமையல் அறையில் மட்டும் இருக்க வேண்டிய அவசியமில்லை. மாறாக அவர்கள் எல்லா வேலையும் தொடர முன்வர வேண்டும் என வலியுறுத்தினார். இவர் கடந்த 2008 ஆம் ஆண்டில் ஓட்டுனர் உரிமம் பெற்றவர்.
2009 ஆம் ஆண்டில் கனரக வாகனங்களை ஓட்ட உரிமம் பெற்று உள்ளார். தனது இருசக்கர வாகனத்தில் கோட்டயத்தில் இருந்து லடாக் வரை 16 நாட்கள் சென்று சாதனை படைத்துள்ளார். மேலும் திருச்சியில் நடைபெற்ற off-road டிரைவிங் போட்டியில் பங்கேற்று வெற்றி பெற்றுள்ளார். இவருக்கு பல்வேறு வாகனங்களை ஓட்டி அனுபவமும் உள்ளது. இதற்கு முன்னதாக 2018 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் கயல்விழி என்ற இளம்பெண் ஒருவர் சாதனை படைத்துள்ளார். அதன்பின் அரசின் 108 ஆம்புலன்ஸ் சேவையின் முதல் பெண் ஓட்டுனர் ஆக வீரலட்சுமி என்பவர் நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.