சென்னை மாநகராட்சி நிர்வாகம் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
சென்னை மாநகராட்சி நிர்வாகம் மழைக்காலத்தை முன்னிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கொசு ஒழிப்பு பணிகளை தீவிரப்படுத்தியுள்ளது. அதன்படி மழைநீர் வடிகால்கள், நீர் வழித்தடங்கள் மற்றும் வீடுகள் தோறும் சென்று கொசு ஒழிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கொசு மற்றும் கொசு புழுக்களை அழிப்பதற்கான பணி தீவிர படுத்தப்பட்டுள்ள நிலையில், கொசு ஒழிப்பு பணியில் 2,239 ஒப்பந்த பணியாளர்களும்,1,262 நிரந்தர பணியாளர்களும் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
இந்த பணிகளுக்காக 8 சிறிய புகைப்பரப்புமும் இயந்திரங்கள், புகைபரப்பும் இயந்திரம் பொருத்தப்பட்ட 66 வாகனங்கள், கையினால் இயக்கக்கூடிய 220 புகைப்பரப்பும் இயந்திரங்கள், 300 பேட்டரி ஸ்பேயர்கள், 120 பவர் ஸ்பேயர்கள், 224 மருந்து தெளிப்பான்கள் போன்றவைகள் பயன்படுத்தப்படுகிறது. அதன்பிறகு அடையாறு, பக்கிங்ஹாம் கால்வாய் மற்றும் கூவம் ஆறு உள்ளிட்ட பகுதிகளில் 10 படகுகள் மூலம் கொசு மருந்து தெளிக்கும் பணி நாளை முதல் தொடங்கப்பட இருக்கிறது.
இதேபோன்று மாநகராட்சிக்கு உட்பட்ட மழைநீர் வடிகால்கள், கால்வாய்கள் மற்றும் நீர் வழித்தடங்களிலும் கொசு மருந்து தெளிக்கும் பணி நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. பொதுமக்கள் தங்கள் வீடுகள் மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் தண்ணீரை தேங்கி வைத்துக் கொள்ளாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். அதோடு வீடுகளில் தண்ணீர் சேமித்து வைக்கும் பாத்திரங்களை அடிக்கடி சுத்தம் செய்வதோடு நன்றாக மூடி வைக்க வேண்டும்.
பொதுமக்கள் கொசுப்புழு உருவாக வாய்ப்பு இருக்கக்கூடிய சிரட்டைகள், டயர்கள், உடைந்த பிளாஸ்டிக் பொருட்கள் மற்றும் குடங்கள், உடைந்து போன சிமெண்ட் தொட்டிகள் போன்றவற்றை அகற்ற வேண்டும். மேலும் மாநகராட்சி மேற்கொள்ளும் கொசு ஒழிப்பு பணிகளில் பொதுமக்களும் ஒத்துழைப்பு தருமாறு மாநகராட்சி நிர்வாகம் அறிவித்துள்ளது.