திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த பாலசமுத்திரம் பகுதியில் வைகுந்தம்-தேவி என்ற தம்பதியினரின் மகன் கார்த்திக் வசித்து வருகிறார். இவர் பழனியாண்டவர் கலை மற்றும் பண்பாட்டு கல்லூரியில் வேதியல் பாடப்பிரிவில் முதுகலை இரண்டாம் ஆண்டு பயின்று வருகிறார். இதில் மாணவன் கார்த்திக் பாலிதீன் பைகளை வைத்து மறுசுழற்சி செய்ய வேண்டும் என தன் ஆராய்ச்சியை தொடங்கி இருக்கிறார்.
அதனை தொடர்ந்து கல்லூரியின் செய்முறை தேர்வுக்காக பாலிதீன் பைகளை வைத்து இயற்கை முறையில் பெட்ரோல் தயாரிக்க வேண்டும் என தன் ஆய்வில் அதிக கவனம் செலுத்தி பல உபகரணங்களை வைத்து செயல்முறை வடிவில் செய்துள்ளார். முடிவில் குறைந்த அளவு மைக்ரான் உடைய பாலிதீன் பைகளை டப்பாக்களில் அடைத்து வைத்து குறிப்பிட்ட டெம்பரேச்சர் அளவு சூடேற்றி அதன் வாயிலாக பெட்ரோலை பிரித்தெடுத்தார்.
இதற்கு முன்பாக தந்தையின் இருசக்கர வாகனத்தில் முதல் ஆய்வை துவங்கி வெற்றிகரமாக செய்து முடித்து உள்ளார். அதுமட்டுமல்லாமல் இருசக்கர வாகனத்தில் இந்த வகை பெட்ரோலை பயன்படுத்தும் சூழ்நிலையில், இன்ஜினுக்கு முழுபாதுகாப்பு கிடைக்கும் எனவும் கார்த்தி தெரிவிக்கிறார்.
எளிமையான குடும்பத்தில் பிறந்தாலும் பெற்றோர்கள் மற்றும் கல்லூரி பேராசிரியர்களின் உதவி மூலம் பாலிதீன் பையிலிருந்து பெட்ரோல் தயாரிக்கும் முறையை கண்டுபிடித்ததாக ஆராய்ச்சி மாணவன் கார்த்திக் கூறினார். அத்துடன் தமிழ்நாடு அரசு தான் கண்டுபிடித்த பெட்ரோலின் தரத்தை ஆய்வு மேற்கொண்டு ஊக்கப்படுத்த வேண்டும் எனவும் மாணவர் கார்த்திக் கோரிக்கை விடுத்து வருகிறார்.