கன்னியாகுமரி மாவட்டம் அருகே வறுமையில் வாடிய குடும்பத்தினருக்கு விஜய் மக்கள் இயக்கம் சார்பில் வீடு கட்டிக் கொடுத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டம் நித்திரவிளை அருகே தோட்டக்கோடு பகுதியை சேர்ந்தவர் வினோத் குமார். இவருக்கு கடந்த ஐந்து வருடத்திற்கு முன் பார்வை பறிபோயுள்ளது. பார்வை இழந்த பிறகு வேலைக்கு செல்ல முடியாத நிலையில், மனைவி மற்றும் குழந்தைகளுடன் பாழடைந்த வீட்டில் வசித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் ஏற்பட்ட மழையில் வீடு முற்றிலும் சேதமடைந்து குடியிருக்க முடியாத நிலை மாறியுள்ளது.
இந்நிலையில் இவருக்கு உதவ மூஞ்சி பாறை ஒன்றிய விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் மற்றும் இளைஞர் அணியினர் முன்வந்துள்ளனர். கடந்த ஒரு வருடத்திற்கு முன் சுமார் 4 லட்சம் மதிப்பில் ஒரு அறை, கழிவறை மற்றும் ஒரு சமையலறை என வீடு கட்டுமான பணிகள் தொடங்கி தற்போது முடிவடைந்துள்ள நிலையில், மார்ச் 13ஆம் தேதி விஜய் மக்கள் நிர்வாக இயக்கிகள் சாவியை வினோத்குமார் இடம் ஒப்படைத்துள்ளனர். இந்த செயலை அறிந்த பலரும் நடிகர் விஜய் மற்றும் மன்ற நிர்வாகிகளுக்கு வாழ்த்து தெரிவித்திருக்கின்றனர்.