பயணி தவறவிட்ட கைப்பையை பத்திரமாக ஒப்படைத்த பேருந்து ஓட்டுநரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள ஆத்திப்பாடி கிராமத்தில் பேருந்து ஓட்டுநரான சிவகுமார் என்பவர் வசித்து வருகிறார். இவர் நேற்று திருவண்ணாமலையில் இருந்து சென்னைக்கு செல்லும் நடத்துனர் இல்லாத பேருந்தை ஒட்டி சென்றார். இதனையடுத்து கோயம்பேடு பேருந்து நிலையத்தில் பேருந்து நின்றுள்ளது. அப்போது ஒரு சீட்டில் பெண் பயணி ஒருவரின் கைப்பை இருந்துள்ளது. இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த சிவகுமார் அதனை எடுத்து திறந்து பார்த்துள்ளார். அதில் விலை உயர்ந்த செல்போனும், தங்க நகை பெட்டியும் இருந்துள்ளது. இது குறித்து சிவகுமார் கோயம்பேடு பேருந்து நிலையத்தில் உள்ள நேரகாப்பாளருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் சிறிது நேரத்தில் பெண் ஒருவர் அழுதவாறு ஒவ்வொரு பேருந்தாக பார்த்துக் கொண்டு வந்துள்ளார். இதனை பார்த்த சிவகுமார் அந்த பெண்ணை அழைத்து விசாரித்துள்ளார். அந்த விசாரணையில் அவர் தன் கைப்பையை தவறவிட்டது தெரியவந்தது. இதனையடுத்து சிவக்குமார் தான் வைத்திருந்த கைப்பையை அந்த பெண்ணிடம் ஒப்படைத்துள்ளார். அந்த கைப்பையை திறந்து பார்த்த அவர் பணம், நகை, செல்போன் அனைத்தும் பத்திரமாக உள்ளது என கண்ணீர் மல்க சிவகுமாருக்கு நன்றி தெரிவித்துள்ளார். மேலும் சிவகுமாரின் நேர்மையை திருவண்ணாமலை மண்டல போக்குவரத்து கழகத்தினர் பாராட்டி வருகின்றனர்.