திருச்சி மாநகர காவல் ஆணையர் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
திருச்சியில் உள்ள மாநகர காவல் ஆணையர் கார்த்திகேயன் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் நமது மாநகரில் கடந்த 2020-ஆம் ஆண்டு போதை பொருள் விற்பனை உள்ளிட்ட பல குற்றச்செயல்களில் ஈடுபட்ட 40 நபர்கள் மீதும், 2021-ஆம் ஆண்டு 85 நபர்கள் மீதும், இந்த ஆண்டு 142 நபர்கள் மீதும் குண்டர் காவல் தடுப்பு சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும் அவர்கள் அனைவரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இதனையடுத்து பள்ளி மாணவர்கள் மற்றும் கல்லூரி மாணவர்களின் எதிர்காலத்தை சீரழிக்கும் வகையில் பள்ளி, கல்லூரி மற்றும் பொது இடங்களில் கஞ்சா விற்பனை செய்த 170 பேர் மீது கஞ்சா வழக்குகள் பதிவு செய்துள்ளோம்.
மேலும் பொது அமைதியை பாதுக்காப்பதற்காகவும், நன்னடத்தைக்கான பிணையம் பெற வேண்டி 1027 நபர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. அதில் 23 ரவுடிகள் உள்ளிட்ட 42 பேர் மீது திருச்சி மாநகர நிர்வாக செயல் துறை நடுவர் அவர்களால் சிறை தண்டனை விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும் புகையிலைப் பொருட்களை விற்பனை செய்த 651 நபர்கள் மீதும், லாட்டரி சீட்டு விற்பனை செய்த 90 நபர்கள் மீதும், சூதாட்டத்தில் ஈடுபட்ட 113 நபர்கள் மீதும், சட்ட விரோதமாக மதுபானங்களை விற்பனை செய்த 1124 நபர்கள் மீதும் உரிய சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குகள் பதிவு செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும் சட்டம் ஒழுங்கை நிலைநாட்டும் வகையில் எடுக்கப்பட்ட பல்வேறு நடவடிக்கை காரணமாக கடந்த ஆண்டை விட இந்த ஆண்டில் குற்ற சம்பவங்கள் குறைந்துள்ளது. இந்நிலையில் சட்ட ஒழுங்கை பேணிக்காக்கவும், சட்டவிரோதமான செயல்களில் ஈடுபடும் ரவுடிகள், கெட்ட நடத்தைக்காரர்கள், வழிப்பறி குற்ற சம்பவங்கள் மற்றும் சமூகவிரோதிகளை கண்டறிந்து அவர்கள் மீது சட்ட ரீதியான நடவடிக்கை தொடர்ந்து மேற்கொள்ளப்படும் என அவர் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.