இயற்கை முறையில் விவசாயம் செய்தால் மகசூல் எடுக்க முடியாது என்று நீண்ட காலமாக நிலவி வரும் போக்கை ஒரு விவசாயி மாற்றிக் காட்டியிருக்கிறார். நீண்ட காலமாக ரசாயன உரங்களைப் பயன்படுத்தி விவசாயம் செய்துவந்த இந்த விவசாயி இப்போது இயற்கை முறையில் விவசாயம் செய்து வருகிறார். அதன் மூலம் மற்றவர்களை விட 30 % கூடுதல் வருமானம் பெற்று முன்மாதிரியாகத் விளங்குகிறார். மகாராஷ்டிரா மாநிலம் நந்துர்பர் மாவட்டத்தில் யுவராஜ் போர்ஸ் என்பவர் வசித்து வருகிறார். இவர் தனது 4 ஏக்கர் விளைநிலத்தில் சக விவசாயிகளைப் போன்று சாகுபடி செய்தார். இதையடுத்து ரசாயன உரங்கள் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகள் பயன்படுத்தப்பட்டதால் விளைநிலம் தன் பலத்தை இழக்கத் தொடங்கியது.
இதனால் விளைச்சல் குறைந்ததால் வருமானத்திற்கு வேறு வழியை யுவராஜ் தேடினார். இந்நிலையில்தான் Zero Budget Natural Farming (ZBNF) இயற்கை விவசாய முறை தொடர்பாக தெரியவந்தது. அதனை தனது விவசாய நிலத்தில் அவர் செய்து பார்த்தார். இந்த முறையில் அதிக விளைச்சல் கிடைக்காது என்பதால் அவரது குடும்பத்தினர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்தாலும் தன் கிராமத்தில் முதன் முறையாக இயற்கை விவசாயத்தில் ஈடுபட்ட யுவராஜ், ரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளைப் பயன்படுத்துவதை முழுவதும் நிறுத்தி விட்டார். அவற்றிற்கு பதில் இயற்கை மூலப்பொருட்களைப் பயன்படுத்தி ரசாயன உரம் மற்றும் பூச்சிக்கொல்லி மருந்துகளைத் தயார் செய்தார். தொடக்கத்தில் பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டது.
அவையெல்லாம் தன் தொடர் முயற்சியால் தகர்த்த யுவராஜ், மெல்ல மெல்ல நல்ல விளைச்சலைப் பெற ஆரம்பித்தார். இப்போது இயற்கை விவசாயம் வாயிலாகவே இரசாயன உரங்களைப் பயன்படுத்தி விவசாயம் செய்பவர்களை விடவும் 30 % அதிகமான வருமானம் பெறுகிறார். அதன்பின் விவசாயி யுவராஜ் தனது விவசாய நுணுக்கங்களை சக விவசாயிகளுக்கு தெளிவாக கற்றுக்கொடுக்கிறார். அந்த வகையில் ஆயிரக்கணக்கான விவசாயிகள் பயன் பெற்றுள்ளனர். மேலும் விவசாயிகள் கடன்உதவி பெறுவது எவ்வாறு என்று வழிகாட்டுகிறார். அதுமட்டுமல்லாமல் பெண்களின் வாழ்வாதாரத்தை உயர்த்த 15 மகளிர் சுயஉதவிக் குழுக்களை உருவாக்கி மதிப்புக் கூட்டப்பட்ட பொருட்களை தயாரிக்கிறார். அத்துடன் தனது விளைபொருட்களை நேரடியாக சந்தையில் விற்பதால் அவருக்கு நல்ல வருமானம் கிடைக்கிறது.