தமிழகத்தில் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் பணியாற்றி வருகிறார். கொரோனா தடுப்பு பணியில் தீவிரம் காட்டிய அவருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. அதிமுக ஆட்சி முடிவடைந்து திமுக ஆட்சிக்கு வந்த பிறகு முக்கியத் துறை அதிகாரிகள் அனைவரும் மாற்றம் செய்யப்பட்டனர். ஆனால் சுகாதாரத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் மட்டும் இன்னும் மாற்றம் செய்யப்படவில்லை. தேர்தல் முடிவுகள் வெளியான அன்றே பூங்கொத்துடன் சேர்த்து கோப்புகளையும் எடுத்துக்கொண்டு ஸ்டாலின் இல்லத்திற்குச் சென்று ஆலோசனை நடத்தினார்.
ராதாகிருஷ்ணன் மாற்றம் செய்யப்படாததற்கு உயர் நீதிமன்றமே பாராட்டு தெரிவித்தது.தற்போது சுகாதாரத்துறை செயலாளர் பதவியிலிருந்து ராதாகிருஷ்ணன் மாற்றம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அந்த பொறுப்பிற்கு டெல்லியில் இருந்து தமிழ்நாட்டிற்கு சமீபத்தில் மாற்றம் செய்யப்பட்ட அமுதா ஐஏஎஸ் கொண்டு வரப்பட உள்ளதாக கூறப்படுகின்றது. இவர் தர்மபுரி மற்றும் செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களின் ஆட்சியராகப் பணியாற்றிய பல்வேறு சீர்திருத்தங்களை மேற்கொண்டார்.
2015 ஆம் ஆண்டு வெள்ளத்தின் போது உடனடியாக களத்தில் இறங்கி மீட்பு பணியில் ஈடுபட்டவர். மேலும் துணிச்சலான, நேர்மையான அதிகாரி என்று பாராட்டப்படும் அமுதா,பிரதமர் அலுவலகத்தில் கூடுதல் செயலாளராக பணியாற்றி வந்த நிலையில் சமீபத்தில் மீண்டும் தமிழக அரசு பணிக்கு திரும்பியுள்ளார். இதையடுத்து அமுதா ஐஏஎஸ் சுகாதாரத் துறைச் செயலாளராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.