நாமக்கல் மாவட்டத்தில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் மின் அலுவலகம் நடைமுறைப்படுத்தும் பணிகள் தொடர்பான ஆய்வு கூட்டம் நடைபெற்றது. இதற்கு தகவல் தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் சேவை துறை அமைச்சர் மனோ தங்கராஜ் தலைமை தாங்கினார். இந்த கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஸ்ரேயா சிங், தமிழ்நாடு கேபிள் டிவி நிறுவனத்தின் தலைவர் குறிஞ்சி சிவகுமார், மாநிலங்களவை உறுப்பினர் ராஜேஷ் குமார், நாமக்கல் மாவட்டத்தை சேர்ந்த அரசின் அனைத்து துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர். இந்த ஆய்வு கூட்டத்தின் போது அதிகாரிகள் அரசு அலுவலகங்களில் இ ஆஃபீஸ் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல்கள் மற்றும் வாய்ப்புகள் குறித்து அமைச்சரிடம் கூறினர்.
அதன்பின் அமைச்சர் மனோ தங்கராஜ் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது, அரசின் திட்டங்களுக்கு யார் தகுதியானவர்கள் என்பதை உடனடியாக தெரிந்து கொள்ள முடியும். இ சேவை மையங்கள் மூலம் அரசின் சேவைகள் 200-ஆக வந்து கொண்டிருந்த நிலையில், தற்போது 300-ஆக உயர்ந்துள்ளது. இனிவரும் காலங்களில் அரசின் அனைத்து துறை சேவைகளும் இ-சேவை மையங்கள் மூலமாக வழங்கப்படும். நாமக்கல் மாவட்டத்தில் தொழில்நுட்ப பூங்காக்கள் அமைக்கப்பட்டு படித்த இளைஞர்களுக்கான வேலை வாய்ப்புகள் மேம்படுத்தப்படும். அரசு அலுவலகங்களில் இ ஆஃபீஸ் முறைகள் செயல்படுத்தப்படும். இதன் மூலம் காகிதங்கள் பயன்படுத்தும் முறைகள் குறைக்கப்பட்டு அரசு அலுவலகங்களில் பணிகள் விரைந்து நடைபெறும்.
கொல்லிமலை பகுதியில் 4 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக டவர் அமைப்பதற்கு ஆதி திராவிடர் நல அலுவலகத்திற்கு மாவட்ட நிர்வாகம் முன்மொழிவு அனுப்பியுள்ளது. தமிழகத்தில் உள்ள 12,225 கிராமங்களில் பைபர் நெட் மூலம் இணையதள சேவைகளை பெறுவதற்கான பணிகள் வேகமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. தமிழகத்தில் புதிதாக அரசு பதவி ஏற்றதிலிருந்து தகவல் தொழில்நுட்பத்துறையானது வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்தத் துறை 16-வது இடத்தில் இருந்து 3-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இதேபோன்று டிஜிட்டல் சேவைகள் வழங்குவதில் 17-வது இடத்தில் இருந்து 2-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. நாமக்கல் மாவட்டத்தில் எல்காட் மூலமாக ஐடி பார்க் அமைக்கப்படும். தமிழகத்தில் உள்ள அனைத்து துறைகளும் விரைவில் டிஜிட்டல் மயமாக்கப்படும் என்றார்.