திண்டுக்கல் மாவட்டத்தில் திருக்குறள் ஒப்பிப்பவர்களுக்கு 1 லிட்டர் பெட்ரோல் வழங்கி புதிய முறையில் கல்வி விழிப்புணர்வு போட்டிகள் நடத்தப்பட்டது.
கொரோனா ஊரடங்கு காலத்தில் மாணவ-மாணவிகள் பள்ளிக்கு செல்லாமல் வீட்டிலேயே இருக்கின்றனர். இதனால் அவர்களுடைய கவனம் சிதறாமல் இருப்பதற்காகவும், அவர்களுடைய படிப்பு திறனை மேம்படுத்துவதற்கும் திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பி.ஆர்.என்.பி. பள்ளி நிறுவனம் சார்பில் பல கல்வி விழிப்புணர்வு போட்டிகள் நடைபெற்றன. இப்போட்டி குள்ளனம்பட்டி பெட்ரோல் சேமிப்பு நிலையத்தில் வைத்து நடத்தப்பட்டது.
இதில் திருக்குறள், பொது அறிவு, ஸ்லோகன் போன்ற பல போட்டிகளும் நடைபெற்றது. இந்தப்போட்டியில் 20 திருக்குறள் ஒப்பித்தவர்களுக்கும், 10 பொது அறிவு வினாக்களுக்கு பதில் அளிப்பவர்களுக்கும் 1 லிட்டர் பெட்ரோல் வழங்கப்பட்டது. அதோடு சிறந்த ஸ்லோகன் கூறுபவர்களுக்கு 5 லிட்டர் பெட்ரோல் பரிசாக வழங்கப்பட்டன. இவ்வாறு புதிய முறையில் அமையப்பெற்ற இப்போட்டிகளில் மாணவ மாணவியர் பலர் மிகுந்த ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.