சென்னை மாநகர போக்குவரத்து கழகம் சார்பாக தமிழக அரசின் திட்டங்களான முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் மற்றும் புதுமைப்பெண் திட்டம் பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் அடிப்படையில் சென்னை மாநகர பேருந்துகளில் விளம்பரம் செய்யப்பட்டு பேருந்துகள், பல்லவன் இல்லத்திலிருந்து இன்று இயக்கப்படுகிறது. சென்னை மாநகரில் முதற்கட்டமாக காலை உணவுத்திட்டம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த 5 பேருந்துகளும், புதுமைப்பெண் திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த 5 பேருந்துகள் என 10 பேருந்துகள் ரோஸ், மஞ்சள், நீலம், பச்சை போன்ற வண்ணங்களில் இயக்கப்படுகிறது.
அதிலும் குறிப்பாக முதலமைச்சரின் காலை உணவுத்திட்டம் பற்றி விழிப்புணர்வு பேருந்தில், தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் பள்ளி குழந்தைக்கு உணவு ஊட்டிவிடுவது போன்று விளம்பரம் செய்யப்பட்டு உள்ளது. இது பொதுமக்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த நிகழ்வில் போக்குவரத்து மேலாண்மை இயக்குநர் அன்பு ஆபிரகாம் தலைமையில், போக்குவரத்து ஊழியர்கள், அலுவலர்கள் பல பேர் பங்கேற்றனர்.
இந்த 10 பேருந்துகளும் அம்பத்தூரிலிருந்து வேளச்சேரிக்கும், திருவொற்றியூரிலிருந்து கோவளம், மத்திய பணிமனையிலிருந்து அண்ணா சதுக்கம், தாம்பரத்திலிருந்து மாமல்லபுரம், பிராட்வேவிலிருந்து பூந்தமல்லி, திருவொற்றியூரிலிருந்து திருவான்மியூர், கலைஞர் நகரிலிருந்து கேளம்பாக்கம், திருவொற்றியூரிலிருந்து பூந்தமல்லி, திருவான்மியூரில் இருந்து மாமல்லபுரம் போன்ற வழித்தடங்களில் இயக்கப்படுகிறது. அத்துடன் வரும் காலங்களில் தமிழக அரசின் மற்ற துறை சார்ந்த திட்டங்களும் பேருந்துகளில் விளம்பரம் செய்ய திட்டமிட்டு இருக்கின்றனர்.